13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு யார் அதிகாரம் வழங்கியது என கேள்வி எழுப்புவோம் என மிஹிந்தலை விகாராதிபதி வரவஹங்குனவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரச தலைவர் தைப்பொங்கலன்று யாழ்ப்பாணம் வந்து தனக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலசலம் கலந்த சேற்றை அள்ளி வீசிய போதே ஜனாதிபதி இவ்வாறு செயற்பட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக பிக்குகள் கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சிங்கள, தமிழ், முஸ்லிம் சகோதரர்களே, நாங்கள் இனவாதிகள் அல்ல. அந்த வகையில் மலசலம் கலந்த சேற்றால் தாக்கினாலும் அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் நாடு ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப் போகிறது என்றால் நாடாளுமன்றத்தில் ரணிலை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்தவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
நமது தலைவர்கள் ஐந்தாண்டுகள் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் அல்ல.மூன்று மகா சங்கமே இந்நாட்டின் பௌத்த தலைமையாகும். அவர்கள் பெரிய சங்கத்தின் தலைவர்கள்.
எனவே, இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்காக முன்னோக்கிச் செல்வோம் என பௌத்த பிக்குகள், இந்து குருக்கள், இஸ்லாமிய மவ்லவிகள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.



