கும்பகோணம் வட்டம், செக்காங்கன்னி, எழில் நகரைச் சேர்ந்தவர் மும்தாஜ்பேகம் (44). இவரது வீட்டிற்கு நேற்று ஒரு பெண் உள்பட 3 பேர் வந்துள்ளனர்.
அவரிடம் எங்களுக்கு மாந்தீரிகம் தெரியும், நாங்கள் செய்து தருகிறோம் எனக் கூறி, அவரிடமிருந்து 1 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கிக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து, பூஜை முடிந்து விட்டது எனப் பொட்டலத்துடன் எழுமிச்சைப் பழத்தைக் கொடுத்து, மறுநாள் பிரித்து பார்க்கும் படி கூறினர். அவர்கள் மீது சந்தேகமடைந்த, அவர், பொட்டலத்தை பிரித்துப் பார்த்தபோது, உப்பை மடித்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில், காவல் ஆய்வாளர் எம்.பேபி மற்றும் போலீஸார், அங்கு சென்று, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
போலீஸார் விசாரணையில், அவர்கள் 3 பேரும், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், கொளம்பலூர், அம்மன் கோயில்பதி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மனைவி ரேனுகாதேவி (28), இவரது கணவன் மாதேஸ்வரன் (26), அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் உறவினரான சீனிவாசன் மகன் விஜய் (21) என்பது தெரிய வந்தது. பின்னர் 3 பேரையும் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.