லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில் இப்படம் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2ஆம் திகதி துவங்கியது. இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படம் இந்தாண்டு அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ரோமோ வீடியோவில், பின்னணியில் ஆங்கில வரிகளுடன் கூடிய பாடல் ஒலிக்க விஜய் சாக்லேட் க்ரீமை தயார் செய்து கொண்டிருக்கிறார். அந்தக் காட்சிகளுக்கு இணையாக தீப்பிழம்புடன் கத்தி ஒன்றும் தயார் செய்யப்படுகிறது. அந்தக் கத்தியை சாக்லேட் க்ரீமுக்குள் முக்கி எடுக்கும் விஜய் ‘ப்ளடி ஸ்வீட்’ என சொல்வதுடன் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுகிறது.
இதையொட்டி விஜய் இருக்கும் இடத்தைத் தேடி கார்கள் அணிவகுத்து வரும் காட்சியும் காட்டப்படுகிறது. விஜய்யின் இருவேறு கதாபாத்திரங்களின் தன்மையை காட்டும் விதத்தில் சாக்லேட் + வன்முறை என்ற குறியீடு வைக்கப்பட்டதா?, ‘லியோ’ கதாபாத்திரத்திரம் லோகேஷின் யூனிவர்ஸில் எங்கு வருகிறது என பல்வேறு டீடெய்லிங்குக்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இருப்பினும் ப்ரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.