பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தின் காந்திநகர் அருகே ஆசரமம் அமைத்து செயல்பட்டு வந்த ஆசராம் பாபுவுக்கு ஏராளமான பக்தர்கள் சேர்ந்ததை அடுத்து, அவர் மேலும் பல இடங்களில் ஆசிரமங்களை அமைத்தார். ராஜஸ்தானில் உள்ள ஆசிரமம் ஒன்றில் இருந்தபோது 2013-ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்த சிறுமியை இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசராம் பாபு, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆசராம் பாபுவால் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்த வழக்கை விசாரித்த காந்திநகர் செசன்ஸ் நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை குற்றவாளி என்றும் நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கில் ஆசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி டி.கே. சோனி இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இருந்தவாறு வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் வழக்கில் ஆஜராகி வந்த ஆசராம் பாபு, இன்றும் அதே முறையில் ஆஜரானார். தீர்ப்பை அடுத்து, அவர் தொடர்ந்து ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆசராம் பாபுவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தங்கையை, ஆசராம் பாபுவின் மகன் நாராயண் சாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சூரத் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது நினைவுகூரத்தக்கது.