எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் சிறந்த சந்தர்ப்பமாக வரும் உள்ளூராட்சி தேர்தல் அமைந்துள்ளது. வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை(29) மட்டக்களப்பு பெரியகல்லாறு ப்ரித்தி மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் தவறானவர்களைத் தெரிவுசெய்து மக்கள் தாம் செய்த தவறினை நிவர்த்தி செய்வதற்கான முதலாவது சந்தர்ப்பமாக இந்த தேர்தல் இருக்கின்றது.
ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திற்கும் இந்த பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு இந்த தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக எமக்கு அமைந்திருக்கின்றது.
நாம் இந்த சந்தர்ப்பத்தினை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கையில் ஈடுபடுமாக இருந்தால் அது மக்களது ஜனநாயக சுதந்திரத்தில் கைவைக்கும் நிலைப்பாடு ஆகும்.
ஆனால் அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் பின்னிற்க மாட்டோம். நாம் எமது தேர்தல் வெற்றிகளை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு அனைவரும் தமிழரசுக்கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது வேட்பாளர்களை நாம் தேடித் தேடி தெரிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் எமது வேட்பாளர் பட்டியலில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கல்வி மான்களே உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.
எமது கட்சியில் எந்தவொரு ஊழல் மோசடி, கொலைக் குற்றச்சாட்டு மற்றும் மண் மாபியாவில் ஈடுபட்டவர்கள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாம் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப்போல் கொலைகாரர்களை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை.
நாம் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெறுவதற்காகவே என்பதை சர்வதேசத்திற்கும் சிங்கள பெரும்பான்மையினத்திற்கும் எடுத்துக்கூறவேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது இனத்தின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழரசுக் கட்சியினை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் மக்கள் அதனை நிரூபிக்க வேண்டும்.
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.