யாழ்ப்பாணம், வலி வடக்கில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.
தெல்லிப்பளை மற்றும் வசாவிளானில் விடுவிக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு வருவதாக அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார நோக்கங்களுக்காக காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு பிரதேசவாசிகள் விடுத்துள்ள கோரிக்கையை மீறி 3,341 ஏக்கர் காணிகளை பாதுகாப்புப் படையினர் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர்.
காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கையெடுக்கும் வரை, ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்ப்பதாக குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.