30 வருடங்களாக ஆயுதம் தூக்கி போராடிய இனத்தில், போராளிகளை கதாநாயகர்களாக கொண்டாடிய இனத்தில், 2010ஆம் ஆண்டின் பின் கொழும்பிலிருந்து வந்து அரசியலுக்கு வந்தவர்கள், ஆயுதம் தூக்காததை பெருமையாக பேசி வாக்கு கேட்கிறார்கள். இது மோசமான அரசியல் கலாச்சாரம். மாவீரர்களிற்கும், போராளிகளிற்கும் செய்யும் துரோகம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்.
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தலைதூக்கியுள்ள இந்த குழுவினரே, அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை தேர்தலில் தோற்கடித்தனர். இப்பொழுது அவரை கட்சியிலிருந்து வெளியே அனுப்ப முயற்சிக்கிறார்கள். மாவையை தோற்கடித்த தமிழ் அரசு கட்சிக்குழுவினருக்கு மக்கள் தண்டனையளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வலி வடக்கு பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மல்லாகம் கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் இரண்டு கூட்டங்களிற்காக வடமராட்சி பிரதேசங்களிற்கு சென்றிருந்தோம். அங்குள்ள மக்கள் வீட்டு சின்னத்தை ஒரு சுயேட்சைக்குழு சின்னத்தை போல, நகைச்சுவையாகத்தான் பார்க்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அங்கு இலங்கை தமிழ் அரசு கட்சியை விட பல கட்சிகள் அதிக வாக்கு பெற்றிருந்தனர். இப்படியான நிலைமையினால்தான் கடந்த தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சறுக்கல் ஏற்பட்டது.
ஆனால் மாவை சேனாதிராசா போன்ற தலைவர்களால் வலி வடக்கு உள்ளிட்ட பகுதிகள், வன்னி, கிளிநொச்சி பகுதிகளிலேயே ஓரளவு அதிக வாக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்தது.
அப்படியான மாவை போன்ற தலைவர்கள் இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகளினால் அதிருப்தியடைந்து ஒதுங்கியிருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்தமைக்கு, ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு குழுதான் முழு காரணம். அவர்கள் 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
35 வருடங்களாக ஆயுத வழியில் போராடி, ஆயுதப் போராளிகளை கதாநாயகர்களாக பார்த்த இனத்தில், 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பிலிருந்து வந்தவர்கள், நாங்கள் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தமில்லாதவர்கள் என பெருமையாக பேசி, எமக்கு வாக்களியுங்கள் என கேட்கிறார்கள். இது மக்களை அவமதிக்கும் செயல். மாவீரர்களையும் போராளிகளையும் அவமதிக்கும் செயல்.
இந்த குழுவினர்தான் தமிழ் அரசு கட்சிக்குள் முக்கிய பொறுப்பிற்குள் வந்து, கட்சியையும், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர்தான், கடந்த பொதுத்தேர்தலில் மாவை சேனாதிராசாவை தோற்கடித்தவர்கள். இப்போது கட்சியை விட்டு ஒதுக்கியுள்ளனர். மாவை சேனாதிராசாவை தோற்கடித்தவர்களை, தற்போது தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேற்ற முயற்சிப்பவர்களை மக்கள் தண்டிக்க வேண்டும்.
நாங்கள் அரசாங்கத்துடன் சில தடவைகள் பேச்சு நடத்தியுள்ளோம். தொடர்ந்து பேசுவோம். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களில் சில முக்கியமான முயற்சிகளை எடுத்துள்ளோம். அரசியல் தீர்வுக்கான நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு தரப்பு முடிவெடுத்து, வெற்றியடைந்துள்ளது. தமிழ் மக்களிற்கு எதையும் செய்யாமல் தப்பிக்க, ரணில் அரசாங்கம்தான் பின்னணியில் இருந்து இதனை செயற்படுத்தியது.
இப்போது, சுதந்திரதினத்திற்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது போலி நாடகம்.
கடந்த முறை ரணில் அரசாங்கத்துடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்து, குடும்பத்துடன் சென்று சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொண்டு, சிங்கக்கொடியை ஏந்திய தமிழரசுக்கட்சி தலைவர்கள், இப்பொழுது திடீரென ஞானம் வந்து, கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளனர். தேர்தல் வருவதே இந்த ஞானத்திற்கு காரணம்.
தமிழ் மக்கள் மத்தியில் கே.வி.தவராசா போன்ற நல்ல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்கள் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களிற்காக தொடர்ந்து பாடுபடுகிறார்கள்.
இன்னும் சில சட்டத்தரணிகள் பணத்திற்காக செயற்படுகிறார்கள். அவர்கள் தமிழ் அரசு கட்சிக்குள்ளும் இருக்கிறார்கள். நல்லாட்சி காலத்தில் ரணில் அரசுடன் நெருக்கமாக இருந்து, கொழும்பு துறைமுக நகர ஒப்பந்த தயாரிப்பில் ஈடுபட்டு, பெருந்தொகை பணத்தை பெற்ற நமது சட்டத்தரணிகள் பற்றிய விபரங்களையும் நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்.
தமிழ் அரசு கட்சியின் பிரமுகரான சட்டத்தரணியொருவர், ரணில் அரசுடன் வெளிப்படையாகவும், கோத்தா அரசில் மறைமுகமாகவும் டீல் பேசி நிறைய பணம் பெற்றிருந்தார். அவரை நெருக்கமாக கவனித்தீர்கள் என்றால், எப்பொழுதும் வலது கையை மேசைக்கு கீழே வைத்திருந்து பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார். அது பணம் வாங்கி பழகிய பழக்க தோசம் என்றார்.