ஹலவத்தை – புத்தளம் வீதியில் பட்டுலு ஓயாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (24) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து புத்தளம் பலாவி கைத்தொழில் நகருக்கு எரிபொருளை விநியோகித்து கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பவுசரே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பவுசர் எதிர்பாராதவிதமாக புத்தளம்- கொழும்பு வீதியில் ஆனைவிழுந்தானுக்கு அருகில் உள்ள ஆற்று பாலத்தின் பாதுகாப்பு பக்க சுவர்களை உடைத்து பட்டுலுஓயாவில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பட்டுலுஓயாவில் நீர் மட்டம் உயர்வினால் பட்டுலுஓயாவில் வீழ்ந்த பவுசர் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பட்டுலுஓயா புகையிரத பாலத்தில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆற்றில் விழுந்த பௌசரின் சாரதி மிகுந்த பிரயத்தனத்துடன் பவுசரை விட்டு இறங்கி பௌசரின் மீது ஏறி காப்பாற்றுமாறு சத்தமிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சாரதியை மீட்டுள்ளனர்.