யாழ் மாநகரசபை முதல்வராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்படவுள்ளார். அவரை முதல்வராக அறிவிக்கும் வர்த்தமானி நாளை வெளியாகும்.
யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு நேற்று (19) நடைபெற்றது. இதன்போது, 24 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருந்த போதும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டதும், கணிசமான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இதனால் சபையை நடத்த கோரம் இல்லையென குறிப்பிட்டு, முதல்வர் தெரிவை ஒத்திவைப்பதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்தார்.
உள்ளூராட்சி ஆணையாளரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஆட்சேபணை தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு இடம்பெற்ற விதம் சரியானது, முதல்வராக இ.ஆர்னோல்ட்டை அறிவிக்கும்படி வடக்கு உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடுமையான அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இந்த விடயத்தில் வடக்கு ஆளுனரும் தலையிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் யாழ் மாநகரசபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவானதாக தீர்மானித்து, நாளை வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது.