அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது என்பார்கள். அரசியலில் தேவையும், காலமும் சூழலும்தான் நண்பர்களையும், பகைவர்களையும் உருவாக்குகிறது. அறத்தின் அடிப்படையிலான நட்புக்களும், பகைகளும் அரசியலில் உருவாகுவதில்லை. இந்த அடிப்படையில் இயங்குவதாலோ என்னவோ, அரசியல்வாதிகளின் பல அடிப்படை இயல்புகள் பற்றி வெகுஜன பரப்பில் எதிர்மறையான பிம்பங்கள் உள்ளன.
இலங்கை விரைவில் ஒரு தேர்தலை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அது நடக்கலாம் அல்லது சற்று தாமதித்து நடக்கலாம். எவ்வாறாயினும், அந்த தேர்தலிற்கு வேட்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
பல புதியவர்கள், பல பழையவர்கள் என இந்த களத்திற்கு பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான புது முகங்களில் ஒன்றே பத்திரிகையாளர் ந.வித்தியாதரன்.
2009 ஆம் ஆண்டின் பின்னர் நடந்த எல்லா தேர்தலிலும் போட்டியிட அவர் விரும்பியிருந்தாலும், 14 வருடங்களின் பின்னர்தான் அவருக்கு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர், பாராளுமன்ற வேட்பாளர் என்றெல்லாம் ஆசைப்பட்டவர், இப்பொழுது வட்டார வேட்பாளராக போட்டியிடவே வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசியல் களத்தில் புதிதாக இறங்கினாலும், தானும் அரசியலுக்கு பொருத்தமான ஒருவர்தான் என்பதை வித்தியாதரன் நிரூபித்துள்ளார்.
யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, நேற்று முன்தினம் (18) தனது விண்ணப்பத்தை கையளித்துள்ளார். அன்றைய இரவே இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று, சந்தித்து பேசிவிட்டு வந்தார்.
வித்தியாதரன் பத்திரிகை ஆரம்பித்த சிறுது காலத்திலேயே எம்.ஏ.சுமந்திரனின் ஆள் என்ற அடையாளம் உருவாகி விட்டது. தமிழ் அரசு கட்சிக்குள் மாவை எதிர் சுமந்திரன் என அணிகள் உருவான போது, பத்திரிகை அறத்தையும் மீறி மாவை சேனாதிராசாவை தாக்கினார். பத்திரிகைகளில் தூசண வார்த்தைகள் எழுதப்படுவதில்லையென்ற காரணத்தினால், தூசணம் மட்டும் எழுதி திட்டவில்லையே தவிர, மற்றும்படி அனைத்து விதமாகவும் மாவை சேனாதிராசாவை திட்டியே பத்திரிகை நடத்தி வந்தார்.
அந்த பத்திரிகையை படிக்காமல் இருந்ததால் மட்டுமே மாவை சேனாதிராசா இன்றளவும் இந்தளவு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவற்றை படித்திருந்தால் அவர் இன்று எப்படியிருந்திருப்பார் என்பது கேள்விக்குரியதே.
வித்தியாதரன் யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடுட விரும்பியிருந்தாலும், மாவை சேனாதிராசாவை பகைத்து எம்.ஏ.சுமந்திரனினால் வேட்பாளராக்க முடியாது. நிலைமையை சுமுகமாக்கி, விவகாரத்தை தீர்த்துக் கொள்ளலாமென சுமந்திரன் தரப்பினர் சிந்தித்திருக்கக்கூடும்.
எம்.ஏ.சுமந்திரன் தனக்கு பிடித்த வேட்பாளர்களை இணைத்துக் கொள்வதெனில் மாவை சேனாதிராசாவை சந்தித்து அது பற்றி பேசி வருகிறார். வலி வடக்கில் ஒரு உறுப்பினரை சேர்க்க வேண்டுமென நேற்றுக்காலையும் கட்சித் தலைவரை சந்தித்து பேசினார். இதேபோல, வித்தியாதரன் விவகாரத்தையும் தீர்க்க உத்தேசித்திருக்கலாம்.
18ஆம் திகதி இரவு 7.15 மணியளவில் மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு ந.வித்தியாதரன் சென்றிருந்தார். இரவு 8.45 மணிவரை இருந்து பேசிவிட்டே சென்றார்.
மாவை சேனாதிராசா ஒரு தலைவரே அல்ல, தலைமைக்குரிய இயல்புகள் இல்லாதவர், கட்சியை அழிக்கிறார் என எழுதியவர்தான், தேர்தலில் போட்டியிட ஆசனத்தை உறுதிசெய்ய, அதே மாவை சேனாதிராசாவின் வீடு தேடி செல்ல வேண்டிய காலம் உருவானது.
மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்ற போது, வித்தியாதரனிற்கு நிச்சயமாக கூச்சமாகவும், உறுத்தலாகவும் இருந்திருக்கும். எனினும், அந்த சங்கடங்களை தீர்க்கும் விதமாக மாவை பேசியதாக தகவல்.
வித்தியாதரனிற்கு தனது ஆதரவு தேவையெனில் அது நிச்சயம் இருக்குமென மாவை சேனாதிராசா பெருந்தன்மையுடன் கூறியதாக தகவல்.
பத்திரிகையாளர்கள் விமர்சனம் வைத்த அரசியல் தலைவர்களை பின்னர் ஒருபோதும் சந்தித்து பேசவே கூடாது என்பது முட்டாள்தனம். சரியான விமர்சனங்களை முன்வைப்பது பத்திரிகையாளர்களின் கடமை. ஆனால் வித்தியாதரன் அதை செய்யவில்லை. சரியில்லாத தலைமை என விமர்சனம் செய்தவர், அதே தலைமையின் கீழ் போட்டியிட வேட்புமனு பெறுவதற்காக, அதே தலைமையை வீடு தேடி சென்று சந்திப்பது எந்த வகைக்குள் அடங்குமென்பது தெரியவில்லை.
யாழ் மாநகரசபை தேர்தலில் வித்தியாதரன், நல்லூர் தொகுதிக்கிளைக்குட்பட்ட வட்டாரமொன்றின் ஊடாக போட்டியிடுகிறார். வண்ணார்பண்ணை பகுதியிலுள்ள 9ஆம் வட்டாரத்தில் வித்தியாதரன் போட்டியிடுகிறார்.
யாழ் மாநகரசபையின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இம்முறை தமிழ் அரசு கட்சி முன்கூட்டியே அறிவிக்காது. வித்தியாதரனை முதல்வராக்க சுமந்திரன் தரப்பினர் விரும்பினாலும், கட்சிக்குள் அதற்கு கணிசமான எதிர்ப்பு உள்ளது. ஆர்னோல்ட்டும் முதல்வர் கனவுடன் உள்ளார். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரனும் அதற்கு பொருத்தமானவர் என கட்சிக்குள் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். இதனால், ஒருவேளை மாநகரசபை ஆட்சியை கைப்பறினால் யார் முதல்வர் என்பதில் தமிழ் அரசு கட்சி இன்னும் தீர்மானமெடுக்கவில்லை.