இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இன்று (19) இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரச தரப்பினரையும், தமிழ் தரப்பையும் சந்திக்கவுள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பிற முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் இணைச் செயலர் (ஐஓஆர்) புனித் அகர்வால், இயக்குநர் சந்தீப் குமார் பையாப்பு, துணைச் செயலர் (இலங்கை) நிதி சௌத்ரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் ரகூ பூரி ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
இந்த சந்திப்பில், வழக்கத்திற்கு மாறாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றாக சந்திக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் திட்டமிட்டுள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக நாளை வெள்ளிக்கிழமை மதியமளவில் சந்திக்கவுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றது இந்தியாவை அதிருப்தியடைய வைத்துள்ளது என தகவல் வெளியாகிய பின்னணியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் அனைத்து தமிழ் தரப்பையும் ஒன்றாக சந்திக்க முடிவெடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
உலகளாவிய கடனளிப்பாளரிடமிருந்து 2.9 பில்லியன் டொலர் கடனை நாடு நாடும் நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்குத் தெரிவித்த நேரத்தில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.