சிவன் கோயில் நிகழ்ச்சிக்கு சைவ நிகழ்ச்சிக்கு யார் வரலாம் யார் வரக்கூடாது
என்பதைச் சைவர்களே தீர்மானிப்பார்கள். கத்தோலிக்க பாதிரியாரோ கிறித்தவப் பாதிரியாரோ அல்ல என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மத்தியில் இதுவரை மதரீதியான பிளவுகள் இல்லாத நிலையில், தற்போது அது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்த கருத்து வருமாறு-
நல்லூர் சிவன் கோயிலிலும் அடுத்துள்ள சைவ மண்டபத்திலும் நடக்கின்ற சூரியனுக்கு நன்றி சொல்கின்ற பொங்கல் விழாவில் இலங்கைக் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
சூரியனை வழிபடுகின்றவர்கள் சாத்தானை வழிபடுகின்றார்கள் என்கின்ற கத்தோலிக்க மற்றும் கிறித்தவப் பாதிரிமார்கள், சைவர்களின் பொங்கல் விழாவில் யார் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானிக்க முடியாது.
சிவன் கோயிலில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் கால் வைக்கக் கூடாது என்று கூறும் உரிமை கத்தோலிக்க மற்றும் கிறித்தவப் பாதிரியார்களுக்குக் கிடையவே கிடையாது.
மடுமாதா கோவிலுக்கு குடியரசுத் தலைவர் வந்த பொழுது சைவர்கள் எதிர்க்கவில்லை.
மன்னார் ஆயர் அண்மையில் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்ற பொழுது சைவர்கள் எதிர்க்கவில்லை.
சைவ விழாவிற்கு வருகின்ற குடியரசுத் தலைவரைக் கத்தோலிக்க பாதிரியார் கால் வைக்கக் கூடாது என்று கூறுகின்ற கொடுமையை இலங்கையிலேயே பார்க்க முடியும்.
கத்தோலிக்கரும் கிறித்தவரும் குடியரசுத் தலைவரோடு நல்லிணக்கமாக அன்பாக உறவாடி வருகிறார்கள்.
சிவன் கோயிலுக்கு வருகிறார். சைவ மண்டபத்திற்கு வருகிறார். சைவக் கடவுளான சூரியனைப் போற்றுகின்ற விழாவில் கலந்து கொள்கிறார். சூரியனுக்கு நன்றி சொல்கின்ற விழாவில் கலந்து கொள்கின்றார் என்றதுமே கத்தோலிக்கப் பாதிரியார் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் பரங்கிகளின் வழிவழிக் கொள்கையை முன்னெடுக்கிறார்.
போர்த்துக்கேயர் எப்பொழுதோ போய்விட்டார்கள். ஒல்லாந்தர் எப்பொழுதோ போய்விட்டார்கள். ஆங்கிலேயர் எப்பொழுது போய்விட்டார்கள்.
இலங்கை சிவ பூமி. சைவர்களின் விழாக்களில் யார் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்ளக் கூடாது என்பதைச் சைவர்களே தீர்மானிக்க வேண்டும்.
சைவ விழாவுக்கு யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதைச் சூரியன் வழிபாடு சாத்தான் வழிபாடு என்கின்ற கத்தோலிக்கப் பாதிரியாரோ கிறித்துவப் பாதிரியாரோ தீர்மானிக்க முடியாது.
அவ்வாறு தீர்மானிக்க முயன்றால் சைவர்கள் கைகட்டி வாய்பொத்திப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
சிவ சேனையில் உள்ள நாம் அவ்வாறு கூறிய கத்தோலிக்கப் பாதிரியாரை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
எனினும், ரணிலின் வருகைக்கு எதிராக இன்று யாழில் நடக்கும் போராட்டத்தில் சைவ மத பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.