நாரஹன்பிட்டியில் உள்ள அரச நிறுவனமொன்றில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகர் பொடி லஸ்ஸியுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளைக் கண்டுபிடிப்பதற்காக தாமரை கோபுரத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் முகாமுக்கு அண்மித்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஏ.ஜி.எஸ். ப்ரீத்தி குமார. கைதானபோது அந்த இளைஞர் மது போதையில் இருந்ததாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது கண்ணாடி போத்தலை உடைத்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரை தாக்க முயன்றதாகவும், வன்முறையாக நடந்து கொண்ட இளைஞனை கட்டுப்படுத்த தடியினால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.
குறித்த இளைஞன் மயங்கி விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞனின் மரணம் பொலிஸாரின் தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினால் நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.