யாழ் மாநகரசபையின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியுள்ளது. மாநகரசபையை கலைக்கலாமா என சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கவுள்ளதாக, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற போதிய பெரும்பான்மையில்லாத காரணத்தினால், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறப்பதாக நேற்று கடிதம் அனுப்பினார். இன்று (31) இரவு 10 மணியுடன் பதவிவிலகுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 23ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட போது, 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஈ.பி.டி.பி வெளிநடப்பு செய்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது.
அந்த வரவு செலவு திட்டத்தில் மாநகரசபையின் வருமானங்கள் கூட பிழையாக குறிப்பிடப்பட்டு, கவனக்குறைவான தவறுகளும் இருந்ததாக விமர்சனம் எழுந்திருந்தது.
இந்த நிலையில் 14 நாட்களிற்குள் இரண்டாவது முறையாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், ஏனைய தரப்புக்களின் ஆதரவை வி.மணிவண்ணன் தரப்பு கோரியிருந்தது.
இரண்டாவது முறையும் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு தெரிய வந்ததையடுத்து, வி.மணிவண்ணன் நேற்று பதவியை துறந்தார்.
பதவி துறப்பதற்கு முன்னதாக, வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கா விட்டால் சபை கலையும் என ஏனைய உறுப்பினர்களை மணிவண்ணன் மிரட்டி ஆதரவு பெற முனைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் குற்றம்சுமத்தினர்.
இந்த நிலையில், மணிவண்ணன் பதவி விலகிய பின்னர், புதிய முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த போது, உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் (உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் 66 பி 4 இன்படி, ) முதல்வர் ஒருவர் பதவி விலகி, அவரின் பின்னர் பதவியேற்கும் முதல்வரும் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பதவியிழந்தால் சபை கலைக்கப்படும் என தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக சட்டமா அதிபரின் கருத்தை கோரவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, மூத்த நிர்வாக சேவை அதிகாரியும், வடமாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம், புதிய முதல்வர் தெரிவிற்கு சட்டத்தில் இடமுள்ளதாக தெரிவித்தார். அவர் தமிழ் பக்கத்திடம் கருத்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் 66 பி 4 இன்படி, வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பதவிவிலகிய பின்னர், பதவியேற்பவர், தனது முதலாவது வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாவிட்டாலே சபை கலையும், இரண்டாவது வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் புதிய முதல்வர் தெரிவு செய்யப்படலாம் என்றார்.
எவ்வாறாயினும், அடுத்த சில வாரங்களிற்கு யாழ் மாநகரசபையின் நிர்வாகத்தை ஆணையாளர் த.ஜெயசீலன் கவனித்துக் கொள்வார். ஆணையாளருக்கு இதன்போது, வரையறுக்கப்பட்ட நிதி அதிகாரமே அளிக்கப்பட்டுள்ளது.