கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்தி தமிழர்களின் வலுவான அரசியல பாதைக்கு வழிசமைக்க சிந்திக்கும் அனைத்து கட்சிகளையும் தனி நபர்களையும் இணைத்துக் கொண்டு அரசியல் பாதையில் பயணிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக உள்ளது
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எமது கட்சியின் கோரிக்கையாக இருக்கின்றது. அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் எமது கட்சி போட்டியிடும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது திருகோணமலை அம்பாறை மாவட்டத்திலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக உறுதியாக இருந்தது அதன் காரணமாக நாம் இரண்டு மாவட்டங்களிலும் போட்டியிடுவதினை தவிர்த்திருந்தோம்
ஆனால் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளோ, ஏனைய கட்சிகளோ, இவ்வாறு தமிழர்களின் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவதை கருத்திக் கொள்ளாது தங்களது அரசியல் இலாபத்தினை மாத்திரம் கருத்தில் கொண்டு வேட்பாளர்களை களம் இறக்கினார்கள். அது மாத்திரமன்றி வெற்றியடைந்து உள்ளூராட்சி மன்றங்களை தங்களது ஆளுகைக்குள் உட்படுத்திய கட்சிகள் கூட உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை பூரணமாக மக்கள் அனுபவிக்கின்ற வகையில் பயன்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றார்கள். பாதை செப்பனிடுவது , சுகாதார வசதிகள், வீதி மின்விளக்குகள் மக்களின் இன்னோரன்ன பிரச்சனைகள், எல்லை பாதுகாப்பாக என அனைத்து விடயங்களிலும் கோட்டை விட்டு, விட்டு மாற்று அரசியல் தலைமைகளின் கைகளை ஓங்க வைத்திருக்கின்றார்கள் இதனால் மக்கள் அரசியல் அதிகாரத்தின் மீது அதிருப்தியுற்றிருக்கின்றனர்.
உள்ளூராட்சி அதிகாரங்களை கூட பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்ற திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் குறித்த மாவட்டங்களின் தமிழர்களின் இருப்பினையும் பாதுகாத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மூன்று மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்
கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் (30.12.2022) நடைபெற்ற கூட்டத்தின் போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கயில்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் சிந்தனை எத்தேர்தல் வந்தாலும் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களையும் களமிறக்குவோமே தவிர ஏனைய பிரதேசங்களில் இருந்து வேட்பாளர்களை போட்டியிடச்செய்யாமல் அந்த மக்களின் அரசியல் தலைமைகளை வளர்த்து விடுவதேயாகும் எனவும் குறிப்பிட்டார்.