பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில், கோரம் இன்மையால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த கூட்டம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை(27) காலை பருத்தித்துறை நகர சபைக்கு தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில்,கோரம் இன்மையால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் அடங்கலாக 10 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
பருத்தித்துறை நகர சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதல் தடவை தோல்வியடைந்து, இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த யோ.இருதயராஜா தனது பதவியை டிசம்பர் 19ம் திகதி திடீரென ராஜினாமா செய்தார்.
பருத்தித்துறை நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒரு ஆசனங்களையும் கொண்டுள்ளது.