25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம்மாற்றக்கோரி ஆளுனரிடம் மகஜர்!

யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம்மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமித்து மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டக்கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜரின் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடமாகாணக் கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாண கோட்டக்கல்வி பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்,இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் என்பவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கொட்டடி கல்வி அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மு.கோமகன், யாழ் ஊடக அமையத்தில் இன்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பாடசாலையின் அதிபராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தவறாக வழிநடத்தி கொட்டடி சமூகத்தையும் ஏமாற்றி பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியேயும் பலவிதமான ஊழல் மோசடிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளமை சமூகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 5 வரை 73 மாணவர்களுக்கு அரசினால் நாளொன்றுக்கு உணவிற்காக 7300 ரூபா வழங்கப்படுகிறது. ஆனால் அதிபரால் 1300 ரூபா இக்கும் குறைவான தொகையே நாளாந்தம் செலவிடப்படுகிறது. மேலும் வலயத்திற்கும், கோட்டத்திற்கும் 7300 ரூபா என கணக்கினை காட்டியுள்ளார்.

இந்த விடயத்தினை நூதனமான முறையில் கையாண்டுள்ளார் அதாவது காய்கறிகளை கடை சென்று வேண்டுவது ஒரு ஆசிரியர்,அதனை சமையல் செய்ய கொடுத்துவிடுவது ஒரு ஆசிரியர், அதன் கணக்குகளை பார்ப்பது ஒரு ஆசிரியர், பிள்ளைகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஆசிரியர், அதற்கான காசோலை படிவம் நிரப்புவது ஒரு ஆசிரியர் என்று ஒரு வேலையை பல ஆசிரியர்களுக்கு பிரித்து கொடுத்து இதில் தனது வேலையை காட்டியுள்ளார்.

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே செய்ய வேண்டிய உணவு கணக்கை ஓய்வு பெற்றுச்சென்ற பிரதி அதிபர் மூலமாக செய்து வந்துள்ள சட்டவிரோத செயற்பாடும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

நன்கொடையாளர் ஒருவரால் பாடசாலை மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 10 லீற்றர் பால் வழங்கப்பட்டு வந்துள்ள போதிலும் 5லீற்றர் பால் மட்டுமே பாடசாலைக்கு எடுத்துவரப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அவல நிலையும் தெரியவந்துள்ளது.

பாடசாலையின் பரிசளிப்பு விழாவுக்காக 125000 ரூபாவும் வர்ணம் பூசுவதற்காக 75000.00 ரூபாய் பழைய மாணவர்களிடம் அதிபர் தனிப்பட்ட ரீதியாக பெற்றிருக்கிறார். அந்தப் பணம் இன்றுவரை எங்கே என்று தெரியவில்லை. பாடசாலையின் பௌதீக வளங்களை பாதுகாப்பதில் அவர் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

நீண்ட காலமாக பாடசாலையின் கட்டிடங்கள் கூரைகள் திருத்தப்பட வேண்டிய அபாய நிலையில் காணப்படுகின்றன. அவை இன்றுவரை சீர்செய்யப்படவில்லை அதற்கான நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை.

அதிபரின் வினைத்திறனற்ற செயற்பாட்டால் பெற்றோர் தமது பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் இணைப்பதால் பாடசாலை மாணவரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2015 இல் 400 ஆக இருந்த மாணவர் தொகை இவ்வருடம் 202 ஆக குறைந்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன் தரம் ஒன்றில் 24 மாணவர்களும் தற்போது 09 மாணவர்களும் இணைக்கப்பட்டுள்ளமை அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்.

அதிபரின் தில்லுமுல்லுகளை தட்டி கேட்ட பெற்றோரின் பிள்ளைகள் வேறு பாடசாலைகளுக்கு நாசூக்காக விரட்டப்பட்டுள்ளனர். ஊழலை தட்டிக்கேட்கும் அல்லது தன் ஊழலுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஆசிரியர்களுக்கு வலயம் மூலம் இடமாற்றம் வழங்கப்பட்டமையே வரலாறாக காணப்படுகிறன்றது.

பாடசாலையின் விழா ஒன்றில் வழிகாட்டியாக மிளிர வேண்டிய அதிபர் மேலைத்தேய பாணியில் அநாகரிகமான பெண் ஆடையுடன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தவறான வழிப்படுத்தலை வழங்கி உள்ள சம்பவம் பெற்றோர் இடையே பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏழு வருடங்களாக பழைய மாணவர் சங்கத்தை செயற்படுத்த பழைய மாணவர்கள் முற்பட்ட போதிலும், அதிபர் பழைய மாணவர்களின் செயற்பாடு அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

அதிபரின் அடாவடித்தனமான அநாகரிமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக கோட்ட கல்வி, வலயகல்வி பணிமனையின் அதிகாரிகள் மட்டத்தில் அறிந்தும் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இன்றுவரை எடுக்கப்படாமல் இருப்பது பாடசாலை சமூகத்திற்கும் கொட்டடி மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை தருவதாக உள்ளது.

மேலும் 2015 அரையாண்டிற்கு பின் அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற இவர் 2018ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம் 1 இற்கு உயர்வடைந்துள்ளார். அதன் பின்னரும் இவரை இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்ற அனுமதித்தது யார்?
எமது பாடசாலையின் கல்வி நிலை மற்றும் பொருளாதார நிலைகள் தற்போது மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாடசாலைகள் புனிதமான இடங்கள் சமூகங்களால் வணங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளவை. ஆசிரியர்களும் அதிபர்களும் கற்றலுக்கு அப்பால் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை பண்பையும் தமது சொல்லாலும் செயலாலும் கற்றுத் தருபவர்கள். சமூகப் பொருத்தப்படான நற்பிரஜைகளை உருவாக்க வேண்டிய பாடசாலைகள் உருமாறி செயற்பட்டால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தாங்கி உள்ள எம்மை போன்ற சமூகத்தின் எதிர்கால சந்ததிகளின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது? எங்கள் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளின் அசமந்த போக்கிற்கு பதில் சொல்லப்போவது யார்?

சமூகத்தின் சாபக்கேடாக விளங்கும் இந்த அதிபரின் ஊழலை அம்பலத்திற்கு கொண்டுவரவேண்டியது அதிகாரிகளின் கடமை. தொடர்ந்தும் ஏழைச் சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க பொருத்தமான தீர்வை எதிர்பார்க்கின்றோம்.
உடனடியாக இந்த அதிபரை இடமாற்றம் செய்வதுடன் ஓர் ஆளுமைமிக்க அதிபரை இப் பாடசாலைக்கு நியமித்து எமது சமூகத்தின் அடையாளமான எமது பாடசலையின் நிலையை உயர்த்தி மீண்டும் கல்வி மட்டத்தில் மாணவர்கள் உயர தங்களாலான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

Leave a Comment