சமூக ஊடக செயற்பாட்டாளரான டிலான் சேனாநாயக்கவை கத்தியால் குத்தி காயப்படுத்திய நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தெமட்டகொட, கொம்பனி வீதி மற்றும் பொரளை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 44 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபர்கள் தினமும் அங்கு செல்வது வழக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட யுவதி ஒருவர் டிலான் சேனாநாயக்கவினால் “கேலி” செய்யப்பட்டதையடுத்து பிரதான சந்தேகநபர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பின்னர், டிலான் சேனாநாயக்க, சந்தேகநபரின் சட்டை கொலரைப் பிடித்து அச்சுறுத்தியதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணர்வதற்காக சந்தேகநபர்களை மிரிஹான தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டிசம்பர் 14ஆம் திகதி நுகேகொடை பகொட வீதியில் உள்ள டிலான் சேனாநாயக்கவின் வீட்டிற்கு முகமூடி அணிந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்து கத்தியால் குத்தியுள்ளனர்.