2004 ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தினம் இன்று மாவட்ட மட்டத்தில் கடைப்பிடிக்கப்படுவதுடன், பிரதான நிகழ்வு காலி பெரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.
2004 இல் இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களைத் தாக்கிய சுனாமியின் அடையாளமாக தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அனர்த்தத்தில் சுமார் 35,000 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர், 5,000 நபர்கள் காணாமல் போயுள்ளனர்.
பெரலிய தெல்வத்த ரயில் விபத்தில் சுமார் 2,000 பேர் பலியாகினர். உலக வரலாற்றில் ரயில் விபத்தொன்றில் உயிரிழந்த அதிக பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும்.
சுனாமி பேரலையால், 34 பிரதேச செயலகங்களில் உள்ள 235,145 குடும்பங்களைச் சேர்ந்த 502,456 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து, சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது.
2005 ஆம் ஆண்டின் அமைச்சரவைப் பத்திரம் எண்.15/1975/715/001-1 இன் படி, 2005 ஆம் ஆண்டு தொடங்கி, சுனாமியால் உயிரிழந்த உயிர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமியில் உயிரிழந்த நபர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




