திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 9 பேரை, ஜனவரி 3ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களைத் தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கை தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கூறி, என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த ஜூலை 8ஆம் திகதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20ஆம் திகதி சோதனை நடத்தினர். திருச்சி சிறப்பு முகாமிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அங்கிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லப்ரொப், வைஃபை மொடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கேரளா கொண்டு சென்றஎன்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் என்ற பிரேம்குமார், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா, முகமது அஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா என்ற கொட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ என்ற பொம்மா, தனுக ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் என்ற சுது சுரங்க, திலீபன் ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களை ஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரும்,சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேவேளை, அவர்கள் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சிப்பதாக இந்திய தரப்பில் கூறப்பட்டாலும், அது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்கார்களை மடக்க இந்திய தரப்பில் அப்படியொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்திய, இலங்கை புலனாய்வு தரப்புக்கள் மிக உயர்ந்த மட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்ற போதும், இந்த விவகாரத்தில் இலங்கையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தில் தற்போது கைதான 9 பேரும் கேரள விழிஞ்சம் கடலில் சிக்கிய போதைப்பொருள், ஆயுத கடத்தலுடன் தொடர்புடையவர்கள். இந்த விவகாரத்தில் சந்தகத்தின் பெயரில் இலங்கையில் கைதானவர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தரப்பில் புலிகளின் மீளுருவாக்கம் என சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படை குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.