மட்டக்களப்பு வாழைச்சேனை ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 4 பேருடன் பயணித்த மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போய் உள்ளார்.
வாழைச்சேனை பிறந்துரைச்சேனை கலைஞர் வீதியை சேர்ந்த முகமட் கஜுன் பயாஸ் (24) என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறை முகத்திலிருந்து மூன்று பேருடன் சென்ற ஆழ்கடல் மீன்பிடி படகு, நேற்றைய தினம் வாழைச்சேனை துறைமுகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கல்முனையை அண்மித்த கடல் பகுதியில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மீன்பிடி படகிலிருந்தவர்கள் உரிமையாளரை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்ததுடன், உதவிப்படகை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.
நேற்று இரவு வாழைச்சேனை மீன்பிடித்துறை முகத்திலிருந்து சாதாரண படகில் நான்கு பேர் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டருக்கு அப்பால் கடலலையின் சீற்றம் காரணமாக படகில் இருந்த ஒருவர் கடலில் விழுந்துள்ளார்.
ஏனைய மூவரும் குறித்த படகுடன் வாழைச்சேனை துறைத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை, வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து சென்ற பலர் உயிரிழந்துள்ளனர், பல கோடி பெறுமதியான சொத்துக்களை இழந்திருக்கின்றோம் என தெரிவித்த மீனவர்கள், வாழைச்சேனை துறைமுகத்திற்கு ஒரு மீட்பு படகை பெற்றுத்தர வேண்டுமென மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– க.ருத்திரன்-