யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை (21) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவு திட்டத்தை வெற்றிகரகமாக நிறைவேற்ற ஈ.பி.டி.பியுடன் மணிவண்ணன் தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வர, வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் கங்கணம் கட்டி செயற்படுகின்றன.
நாளைய வரவு செலவு திட்டத்தை எதிர்க்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிகப்பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஓரிருவர் ஆதரிக்கலாமென்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இதேவேளை, கடந்த வரவு செலவு திட்டத்தில் மணிவண்ணன் தரப்பை ஆதரித்த உதிரி தரப்பினரின் நிலைப்பாடும் தெளிவற்றதாக காணப்படுகிறது.
ஈ.பி.டி.பியின் ஒரு தரப்பினரும் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க விரும்புகிறார்கள். ஈ.பி.டி.பியில் ஒரு தரப்பு மணிவண்ணனிற்கு எதிரான நிலைப்பாட்டில் நீண்டகாலமாக உள்ளது. வாக்கெடுப்பு தருணங்களில் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென போர்க்கொடி தூக்குவதும், பின்னர் அடங்கி விடுவதும் வழக்கம்.
கடந்த முறை ஈ.பி.டி.பியின் துணையுடன், மணிவண்ணன் வரவு செலவு திட்டத்தை வெற்றி கொண்டார்.
இம்முறையும் மணிவண்ணன் தரப்புடன் பேச்சு நடப்பதாகவும், தமது நிலைப்பாடுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நாளை வரவு செலவு திட்டத்தை ஆதரிப்போம் என ஈ.பி.டி.பி தரப்பு தெரிவித்தது.
எனினும், ஈ.பி.டி.பி தரப்பின் சில உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்தரப்புடன் பேச்சு நடத்தி வருவதையும் அறிய முடிகிறது.
நாளை வரவு செலவு திட்டத்தை நிச்சயம் தோற்கடிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
எனினும், இன்றிரவுக்குள் மணிவண்ணன் தரப்பிற்கும், ஈ.பி.டி.பிக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் வரவு செலவு திட்டம் வெற்றியடையும்.