யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. படகிலிருப்பவர்கள் வெளிநாட்டு அகதிகள் எனவும், சுமார் 150 வரையான அகதிகள் இருக்கலாமென்றும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
படகில் இருப்பவர்கள் இலங்கையர் அல்ல, வெளிநாட்டினர் என்பது உறுதியாகியுள்ளது.
மீன்பிடி தொழிலுக்கு சென்றவர்கள் கடலில் படகு தத்தளிப்பதை அவதானித்து, தகவல் வழங்கியுள்ளனர்.
கடற்படை மற்றும் கடற்றொழில் அமைச்சிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் மீனவர்களும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
கட்டைக்காட்டிற்கும், உடுத்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில், சுமார் 8- 10 கடல் மைல் தொலைவில் கடகு தத்தளித்த நிலையில் காணப்பட்டது.
படகை நேரில் கண்ட மீனவர்களின் தகவலின்படி, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் அதில் உள்ளனர்.
படகு கடல் அலையில் அடிபட்டு அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த படகில் இருந்தவர்கள் தம்மை மாலைதீவு வாசிகள் என தெரிவித்ததாக, அந்த பகுதிக்கு சென்ற மீனவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
மற்றொரு தகவலின்படி, அவர்கள் ரோஹிங்கியா அகதிகள் என கூறப்படுகிறது. பங்களாதேசிலிருந்து அகதியாக புறப்பட்டதாக படகிலிருந்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
படகில் இருப்பவர்கள் வெளிநாட்டினர் என்பதை பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் உறுதி செய்தனர்.
எனினும், அவர்கள் எந்த நாட்டினர் என்பது உத்தியோகபூர்வமாக உறுதியாகவில்லை.
அந்த படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. கடற்கொந்தளிப்பு காரணமாக மீட்பு பணி தாமதமடைந்துள்ளது.