இனத்துக்காக ஆயுதப் போராட்டத்தில் பயணித்த போராளிகள் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கைகோர்த்தமை வரவேற்கிறேன் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக போராளிகள் கட்சி தனது முதலாவது தேசிய மாநாட்டை நடத்தியதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுதப் போராட்டம் மெளநிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக வழியில் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க ஜனநாயக போராளிகள் கட்சி தயாராகியுள்ளது.
நாங்கள் ஆயுதம் ஏந்தாவிட்டாலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இணைந்தே பயணித்தோம். அக் காலப்பகுதியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் காத்திரமான விடையங்கள் இடம்பெறவில்லை.
பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய சிங்கள பேரினவாத அரசு தமிழர் மீது கொடிய யுத்தத்தை மேற்கொண்ட நிலையில் பல அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டது.
இவ்வாறான நிலையில் விடுதலைப் போராட்டம் ஜனநாயகப் போராட்டமாக உருவெடுத்து தேர்தல் அரசியல் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் முன் எடுத்துச் சென்றோம்.
எமது மக்களின் அரசியல் தீர்வு விடையங்களில் ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து பயணிக்க முன்வந்துள்ளமை வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, வடமாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.