நுவரெலியா சென் அன்றூஸ் வீதியில் இன்று (15) பகல் உணவகமொன்றில் தீ பரவல் ஏற்பட்டது.
உணவகத்தின் சமையல் அறையில் இருந்த எரிவாயு கசிந்து இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவகத்தில் சமையல் வேலை செய்தபோது, சமையல் அடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டரின் ரெகுலேட்டர் ஊடாக எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திடீரென பாரிய தீ பரவல் ஏற்பட்டதையடுத்து கடைத் தொகுதியில் உள்ள மக்கள், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர் . அத்துடன் நுவரெலியா பொலிஸார் மற்றும் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் உணவகம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அருகில் உள்ள கடைகளுக்கும் பகுதியளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.