சனிக்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் இருந்து திரும்பும் போது விபத்தில் சிக்கிய 24 வயதுடைய வர்த்தகரான மொஹமட் ரைசுல் ரிசாக் என்ற Mercedes காரின் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் சந்தேக நபர் சனிக்கிழமை காலை 9.55 மணியளவில் டுபாய்க்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சந்தேகநபர் இலங்கையில் தனது பெயரில் மூன்று Mercedes கார்களை வைத்திருப்பதாகவும், அந்த வாகனங்களுக்கான பணம் டுபாயில் இருந்து பெறப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் தாயாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 58 வயதுடைய நபரொருவர் கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசு கார் (Mercedes) முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்ததையடுத்து கார் சாரதி அங்கிருந்து தப்பியோடினார். விபத்தின் போது காரில் மூன்று பெண்களும் மற்றுமொரு ஆணும் இருந்ததாகவும், 29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சந்தேகநபர் சாரதிக்கு தெஹிவளை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இரண்டு முகவரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் கொழும்பு முன்னணி ஹோட்டல் ஒன்றில் சொகுசு அறையில் தங்கியிருந்தார்.
சந்தேக நபர் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை கிளப்பில் பார்ட்டியில் ஈடுபட்டதாகவும், விபத்து நடந்த போது காருக்குள் இருந்த மூன்று பெண்கள் அவரை இரவு விடுதியில் சந்தித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




