கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக கடும் குளிரான காலநிலை காரணமாக கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அடிப்படை தேவைகள் வழங்கப்படாமல் காடுகளில் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதே காரணம் என மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 256 மாடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 210 மாடுகளும், அம்பாறை மாவட்டத்தில் 16 மாடுகளும் கடும் குளிரான காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து விலங்குகளை காப்பாற்றும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.
விலங்குகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீரை வழங்கவும், விலங்குகளின் கொட்டகையைச் சுற்றி அவற்றை சூடேற்றுவதற்கு தேவையான நெருப்புகளை தயாரிக்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்துமாறு இயக்குநரிடம் கூறினார்.
கடும் குளிரான காலநிலை குறைந்துள்ளதால், கால்நடைகளின் பாதுகாப்பை விவசாயிகள் உறுதி செய்ய முடிந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கால்நடைகளுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்காமல், கால்நடைகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும் விவசாயிகளைக் கையாள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராயுமாறு மாகாண அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.