தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய மட்ட திட்டங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கும் செலவிடப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவறான தகவல்களை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமை பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பினார்.
குறித்த திட்டங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் சம்பளம் கணக்கிடப்பட்டு தனது தனிப்பட்ட ஊழியர்களிற்கு செலவிடப்பட்டதாக தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியதாவது:
ஒரு வாரமாக பல ஊடக நிறுவனங்கள் என்னை தொடர்புபடுத்தி மிகவும் தவறான செய்தியை பரப்பின.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எனது புகைப்படங்களை வெளியிட்டு ஜனாதிபதியின் ஊழியர்களின் பராமரிப்புக்காக ஆயிரத்து நானூற்று எண்பது மில்லியன் செலவிடப்பட்டதாக கூறின. இது உண்மைதான். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக 43% மற்றும் மைத்திரிபால சிறிசேன 57% நிதியை பயன்படுத்தியுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின்படி, கோரிக்கை விடுத்து செய்தி வெளியிடப்பட்டது.
நான் ஜனாதிபதியாக இருந்த போது தேசிய அளவிலான ஏழு திட்டங்களை நடைமுறைப்படுத்தினேன்.அந்த திட்டங்கள் நாட்டில் பிரபலமடைந்தன.பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வேலைத்திட்டம்,கிராம சக்தி திட்டம் போன்றவற்றுக்கு அதிகளவிலான அதிகாரிகளை நியமித்தோம்.
மற்ற அரசு நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு தேசிய திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.இந்த திட்டத்தில் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.
இந்தத் திட்டங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்துடன் இந்தத் தொகையும் காட்டப்படுகிறது.இதற்கு விசாரணை தேவையில்லை.இந்தத் தவறான தகவலைத் திருத்தப் பாடுபடுங்கள் என்றார்.