யாழில் நடுவீதியில் கேக் வெட்டியதுடன், தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல் ‘புள்ளிங்கோ’க்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிசார் தமது பிரிவுட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவரை பரிசோதனை செய்ய வேண்டும் என, தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியை நேற்றிரவு தொடர்பு கொண்டுள்ளனர்.
இதன்போது கோப்பாயிலுள்ள தனது வீட்டிலிருந்த சட்டவைத்திய அதிகாரி, கைதானவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
நள்ளிரவு 12 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி தனது காரில் கோப்பாய் வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கோப்பாய் நாவலர் பாடசாலை முன் உள்ள வீதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியினை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
சட்ட அதிகாரியின் வாகனம் பயணிப்பதற்கு இடமளிக்காது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் சட்ட வைத்திய அதிகாரியை தாக்கவும் முயற்சித்ததோடு காரின் கண்ணாடியினையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
வைத்திய அதிகாரி உடனடியாக கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கோப்பாய் பொலிசார் விரைந்து சட்ட வைத்திய அதிகாரியை பாதுகாப்பாக மீட்டதோடு கடமைக்கு இடையூறு விளைவித்த 10 இளைஞர்களையும் கைது செய்துள்ளதோடு இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் அரசடி, கோப்பாய், திருநெல்வேலி பகுதி சேர்ந்த இளைஞர்கள் எனவும், புள்ளிங்கோக்கள் என தம்மைத்தாமே அழைத்து வருவதும் தெரிய வந்தது.
கைதான 10 புள்ளிங்கோக்களும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.