தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழர் விடுதலைக் கூட்டணியில் தொடர் சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. தமிழர் விடுதலை கூட்டணியின் கிளர்ச்சி அணியொன்று கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயற்சித்தது. எனினும், அது வெற்றியளிக்கவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. தற்போதைய நிலவரப்படி, ஆனந்தசங்கரி தரப்பினரின் கையே ஓங்கியுள்ளது.
போட்டிக்குழுவினர் தனியான நிர்வாகம் தெரிவு செய்திருந்த போதும், அவர்களால் சவால் அளிக்க முடியாமல் போனது.
இதை தொடர்ந்து கட்சியின் மத்தியகுழு, பொதுக்குழுக்களை கூட்டிய ஆனந்தசங்கரி தரப்பினர் புதிதாக நிர்வாகம் தெரிவு செய்திருந்தனர். இதில் கட்சியின் தலைவராக ப.சிறிதரன் செய்யப்பட்டிருந்தார். கட்சியின் அதிகாரமிக்க பொறுப்பான, பொதுச்செயலாளராக வீ.ஆனந்தசங்கரி தெரிவாகியிருந்தார்.
இதை தொடர்ந்து கட்சி சுமுக நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சிக்குள் மீண்டும் குழப்பம் உருவாகியுள்ளது.கட்சியின் புதிய தலைவர் ப.சிறிதரனிற்கு எதிராக கட்சியினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்தனர்.
கடந்தவாரம் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.
மட்டக்களப்பை சேர்ந்த அருண் தம்பிமுத்து, கடந்த தேர்தலில் யாழில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட பவதாரணி ஆகியோர் தற்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்கள். அவர்களை கட்சியின் மத்திய செயற்குழுவில் நியமிக்க, கட்சியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்ட ஒரு பகுதியினர் விரும்புகின்றனர்.
இதேவேளை, இந்த நியமனங்களிற்கு கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஒரு தொகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
புதிய நியமனங்களில் அவசரப்படத் தேவையில்லை, கட்சியின் பொதுச்சபை கூடும் போது புதியவர்களை இணைக்கலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. எனினும், குறிப்பிட்ட தனிநபர்களிற்கு எதிரான நிலைப்பாட்டை தாம் கொண்டிருக்கவில்லையென அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்தவாரம் மீண்டும் மத்திய செயற்குழு கூடி, அருண் தம்பிமுத்து, பவதாரணி ஆகியோர் மத்திய செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களிற்கு எதிராக செயற்பட்டதுடன், அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கைகளிற்கு ஒத்துழைக்காமல் செயற்படுவதாக குறிப்பிட்டு, தற்போதைய தலைவர் ப.சிறிதரனிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.