கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய
ந. சரவணபவன் அவர்களிற்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு தற்காலிக
இணைப்பு வழங்ப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து சுகாதாரஅமைச்சர் ஹெகலிய
ரம்புக்வெலவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்.
22.11.2022 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் கிளிநொச்சி கிருஸ்ணபுரம்
தொற்று வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகளுடன் நேரடியாக தொடர்புபட்ட
எவருக்கும் எதிராக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படாத அதேவேளை
திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்குடன் பக்கச்சார்பாக அவர் தண்டிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. இது குறித்த உரிய விசாரணைகள் நடத்தப்பட்டால் அவர் அவரது திணைக்கள பணியாளர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்களது பணிப்பாளர் என்ற வகையிலேயே அவர் குற்றச்சாட்டினை எதிர்கொள்வது தெரியவரும். ஆகவே முறையான விசாரணைகள் மூலம் குற்றம் செய்த உத்தியோகத்தர்கள் நிரூபணமாகும் வரை அவரை மீண்டும் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்த விசாரணைகள் நிறைவுபெறும் வரை வைத்தியர் ந.சரவணபவன் தற்காலிக இணைப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் கடந்த 14.11.2022 தொடக்கம்
இணைப்பட்டிருந்தார்
கிளிநொச்சியில் உள்ள வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையோடு தொடர்புபட்ட
முறைகேடுகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் விசாரணைக் குழுவானது
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்
கடமையாற்றும் இரு அரச அதிகாரிகள் மற்றும் மூன்று அரச அலுவலர்கள் தாபன
விதிக்கோவையின் பிரகாரம் குற்றங்கள் புரிந்துள்ளதாக கண்டறிந்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக மாதிரி குற்றப்பத்திரம்
தயாரிக்கப்பட்டு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் உரிய ஒழுக்காற்று
அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்த
இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.