நியூசிலாந்தில் ஏலத்தில் விற்கப்பட்ட சூட்கேஸ்களில் இரண்டு குழந்தைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண், தென் கொரியாவில் இருந்து நியூசிலாந்திற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
42 வயதான அந்தப் பெண்ணை அழைத்து வருவதற்காக 3 நியூசிலாந்து பொலிசார் தென் கொரியாவிற்குச் சென்றிருந்தனர். மதியம் ஒக்லாந்து விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண், மனுகாவ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களும் நியூசிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சியோலின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“உலகளாவிய கவனத்தைப் பெற்ற இந்த வழக்கின் உண்மை, நியூசிலாந்தில் நியாயமான மற்றும் கடுமையான நீதித்துறை செயல்முறை மூலம் வெளிப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று சியோலில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.
சந்தேக நபர் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் AFP இடம் தெரிவித்தார்.
“அவர் இரவோடு இரவாக காவலில் வைக்கப்படுவார், பின்னர் மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் ஆஜர்படுத்தப்படுவார்” என்று காவல்துறை மேலும் கூறியது.
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இரண்டு பாடசாலைக் குழந்தைகளின் எச்சங்களை கண்டுபிடித்த சில வாரங்களுக்குப் பிறகு, தென் கொரிய காவல்துறையினர் சந்தேக நபரை செப்டம்பர் மாதம் துறைமுக நகரமான உல்சானில் கைது செய்தனர்.
தென் கொரியப் பொலிசார் லீ என்ற குடும்பப்பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்த பெண், பழுப்பு நிற துணியால் மூடப்பட்ட நிலையில் சாதாரண உடையில் புலனாய்வாளர்களால் உல்சான் காவல் நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகின.
அந்த பெண் பொலிஸ் வாகனத்திற்பு அழைத்துச் செல்லப்பட்டபோது, கொலைகளை ஒப்புக்கொள்வாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நான் அதை செய்யவில்லை” என்று திரும்பத் திரும்ப கூறினார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தெற்கு ஆக்லாந்தில், உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் பாவித்த பொருட்களுக்கான ஒன்லைன் ஏலம் நடந்தது. இதில், குடும்பமொன்று லொக்கர்கள், சூட்கேஸ்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியிருந்தது.
அவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து பார்த்த போது, சூட்கேஸ்களிற்குள் இரண்டு குழந்தைகளின் எச்சங்கள் காணப்பட்டன.
5- 10 வயதிற்கு இடைப்பட்ட வயதுள்ள மாணவர்கள் என்பதும், அவர்கள் கொல்லப்பட்டு சூட்கேசிற்குள் அடைக்கப்பட்டு 3 -4 ஆண்டுகள் சேமிக்கப்பட்டிருக்கலாமென்பதும் தெரிய வந்தது.
உடல்கள் ஒரே அளவிலான இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சூட்கேஸ்களை வாங்கிய குடும்பத்தினர் குழந்தைகளின் எச்சங்களை பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தனர். அவர்களிற்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
தற்போது கைதான பெண்ணின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை. லீ என்ற பெயரால் மட்டும் குறிப்பிடப்பட்டார்.