கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021 இல் இரண்டு ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட்.
ஆனால், நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான போட்டிகளில் ரொனால்டோ ஆடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. முக்கியமாக அந்த அணியின் பயிற்சியாளர் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
அதுதொடர்பாக பேட்டியளித்த ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் குறித்தும், அணியின் தனக்கு செய்யப்பட்ட துரோகம் மற்றும் ரூனி குறித்தும் வெளிப்படையாக இப்படி பேசினார். “அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம். நான் அவரை விட சிறந்தவன் என இங்கு சொல்லவில்லை” இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார்.
அவர் பயிற்சியாளர் டென் ஹாக்கை மதிக்கவில்லை என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் தெரிவித்திருந்தது.
அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது.
கட்டாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கானா அணிக்கு எதிரான போர்த்துக்கலின் தொடக்க ஆட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரொனால்டோவின் மான்செஸ்டர் உடனான பயணம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ 4 வருடங்களில் தற்போது 4வது அணிக்கு மாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.