அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு நேற்று இதனை தீர்மானித்தது.
21வது திருத்தத்தின் மூலம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள அரசியலமைப்பு பேரவையில், 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். சபாநாயகர் இதன் தலைவராக செயற்படுவார். பதவி வழியாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதன் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தலா ஒரு பிரதிநிதியை பெயரிடுவர். நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும், சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிப்பர்.
நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினராக த.சித்தார்த்தனை நியமிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றகுழு ஏகமனதாக தீர்மானித்தது.
19வது திருத்தத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவையை, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 20வது திருத்தத்தின் மூலம் வலுவிழக்க செய்து, 5 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டது. எனினும், அது அரசியலமைப்பு பேரவையை போல தீர்மானம் மிக்கதாக அமைந்திருக்கவில்லை.
தற்போது, 21வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு பேரவை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்.
பிரதம நீதியரசர்கள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், ஒம்புட்ஸ்மன், நாடாளுமன்ற செயலாளர் ஆகிய நியமனங்களை அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனே ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.