புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக வடமாகாணத்தில் பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மன்னார், தம்ப பவனி காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு நேற்று (20) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, இந்நாட்டு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் இதற்குப் பொறுப்பான நிறுவனமான இலங்கை மின்சார சபை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அதிகார சபையுடனான கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் மற்றும் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு விரைவாக மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி, இங்கு வலியுறுத்தினார்.
கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் மீன்பிடி படகுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் வலுசக்தி முறையை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் வடக்கின் பொருளாதாரத்திலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடல்நீர் சுத்திகரிக்கும் திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இதன் ஊடாக எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வரட்சியான காலநிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வன வளம் மற்றும் நீர் மூலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
சிறிய நீர்மின் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறிய நீர்மின் திட்டங்களாக மாற்றக்கூடிய நீர்ப்பாசனக் கால்வாய்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் வலுசக்தி துறையில் எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை அடையாளம் காணுதல் மற்றும் ஆராய்ச்சி செய்வது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.