பெண்களை டுபாயில் வேலைக்கு அனுப்பி, பின்னர் சட்டவிரோதமான முறையில் ஓமானுக்கு அழைத்துச் சென்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (19) காலை கைது செய்யப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மற்றும் மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆலோசனை வழங்கினார்.
நாடு முழுவதும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெண்களை ஓமானில் வேலைக்கு அழைத்துச் சென்ற நபருக்கு எதிராக பயணத்தடையை பெறுவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி இன்று காலை அபுதாபியில் இருந்து விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 44 வயதுடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஆவார்.
விசாரணை அதிகாரிகள் கட்டுநாயக்க பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இந்த நபருக்கு எதிராக மனித கடத்தல் குற்றச்சாட்டை பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) மற்றுமொரு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.