27.6 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: இரண்டு சம்பியன் அணிகளுடன் குரூப் E!

கட்டார் 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், முன்னாள் சம்பியன்களான ஸ்பெயின், ஜெர்மனியுடன் பலம் குறைந்த ஜப்பான், கோஸ்டா ரிகா அணிகள் குரூப் E இல் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் முன்னேறுவதில் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்க வாய்ப்பு இல்லை.

ஸ்பெயின்

தரவரிசை 7, பயிற்சியாளர் – லூயிஸ் என்ரிக்,

ஸ்பெயின் அணி பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறமையை இயல்பாகவே கொண்டது. இதுவே அந்த அணிக்கு வரம் என்றும், சாபம் என்றும் நிபுணர்கள் கூறுவது உண்டு. லா ரோஜாஸ் என்ற புனை பெயரை கொண்ட ஸ்பெயின் அணியினர் பந்தை கடத்திச் செல்வதில் அற்புதமாக செயல்படக்கூடியவர்கள். எந்த அணியையும் வீழ்த்தும் திறன் ஸ்பெயினிடம் உள்ளது. அதே நேரத்தில், அவர்களின் அணுகுமுறை பார்ப்பதற்கு சில நேரங்களில் சலிப்பை தரக்கூடும். மேலும் கடைசி நிமிடங்களிலும் பந்தை கடத்திக் கொண்டே செல்லும் உத்தி எதிர்வினையை தரக்கூடும்.

2018 ஆம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை, 2020 ஆம் ஆண்டு யூரோ கோப்பையில் ஸ்பெயின் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. இருப்பினும் 2021 ஆம் ஆண்டு யுஇஎஃப்ஏ நஷன்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம் அவர்கள் ஃபோர்முக்கு திரும்பினர்.

பலம்: ஸ்பெயின் அணியில் சில சிறந்த மிட்ஃபீல்டர்கள் உள்ளனர். மூத்த வீரரான செர்ஜியோ புஸ்கெட்ஸ் மற்றும் இளம் வீரர்கள் பெட்ரி, கவி ஆகியோர் மிட்ஃபீல்டில் வலுவாக திகழ்கின்றனர்.

பலவீனம்: ஓய்வு பெற்ற டேவிட் வில்லா போன்ற தரமான ஸ்ட்ரைக்கர்கள் அணியில் இல்லை. ஸ்பெயின் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ள ஆல்வரோ மொராட்டா தாக்குதலுக்கு தலைமை தாங்க உள்ளார். எனினும் இவரிடம் இருந்து சீரான திறன் வெளிப்படுவது இல்லை. பார்சிலோனா விங்கர்களான ஃபெரான் டோரஸ் மற்றும் அன்சு ஃபாட்டி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக் கூடும்.

ஜெர்மனி

தரவரிசை 11; பயிற்சியாளர் – ஹன்சி ஃபிளிக்

2018ஆம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் நடப்பு சம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய ஜெர்மனி லீக் சுற்றுடன் வெளியேறியது. தொடர்ந்து யுஇஎஃப்ஏ நஷன்ஸ் கோப்பையின் முதல் சீசனில் தங்கள் குழுவில் கடைசி இடத்தைப் பிடித்தனர். 2020 யூரோ கோப்பையில், நொக் அவுட் சுற்றை கடக்க முடியவில்லை. எனினும் கடந்த ஜனவரியில், இத்தாலிக்கு எதிரான நஷன்ஸ் லீக் போட்டியில் துடிப்புடன் செயல்பட்டு 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இதனால் பயிற்சியாளர் ஃபிளிக் தனது மேஜிக்கை கட்டாரில் காட்டக்கூடும் என்று ஜெர்மன் ரசிகர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் பேயர்ன் முனிச் கிளப்புக்காக, பிளிக் ஏழு பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். மேலும் இரண்டு சீசன்களில் பன்டஸ்லிகா பட்டங்களையும் வென்றுள்ளார்.

பலம்: வலுவான அணியை ஜெர்மனி கொண்டுள்ளது. 36 வயதான கோல்கீப்பர் மானுவல் நியூயர், 19 வயதான மிட்ஃபீல்டர் ஜமால் முசியாலா என அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்கள் பலத்தை ஒருசேர இணைக்கக்கூடியவர்கள்.

பலவீனம்: ரியல் மாட்ரிட்டின் அன்டோனியோ ருடிகரைத் தவிர, ஜெர்மனியின் தரவரிசையில் உறுதியான டிபன்டர்கள் இல்லை. வெஸ்ட் ஹாம் யுனைடெட்டின் திலோ கெஹ்ரர், ஆர்பி லீப்ஜிக்கின் டேவிட் ரம் ஆகியோர் வலுவான திறனை வெளிப்படுத்துவது இல்லை.

ஜப்பான்

தரவரிசை 24; பயிற்சியாளர் – ஹஜிமி மொரியாசு:

ஜப்பான் கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் மேற்கொண்ட உத்திகளை தொடர்ந்தால், அந்த அணி கட்டாரில் லீக் சுற்றுடன் மூட்டை கட்ட வேண்டியதுதான். 2018ஆம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் ஜப்பான் அணி நொக் அவுட் சுற்றில் பெல்ஜியத்துக்கு எதிராக முதல் 20 நிமிடங்களிலேயே 2 கோல்களை அடித்து மிரட்டியது. ஆனால் அதன் பின்னர் பெல்ஜியத்தை ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததால் அந்த ஆட்டத்தில் ஜப்பான் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

ஜப்பான் கவர்ந்திழுக்கக்கூடிய வகையிலான ஆட்டத்தை விளையாடுகிறது. ஆனால் பெரிய அளவிலான தொடர்களின் போது நம்பிக்கையில் ஏற்படும் தேக்கமும், அனுபவமின்மையும் பாதகமாக அமைகிறது. அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பிய கிளப் போட்டிகளில் விளையாடிய அனுபவங்களைக் கொண்டுள்ளனர். ஜப்பான் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மிட்பீல்டர் வட்டரு என்டோ, பன்டஸ்லிகா தொடரில் விஎஃப்பி ஸ்டட்கர்ட் அணிக்கு கப்டனாக உள்ளார்.

பலம்: வளைந்து கொடுக்கும் தன்மைதான் ஜப்பானின் முக்கிய பலம். அவை எந்த சூழ்நிலைக்கும் எந்த விதமான விளையாட்டு பாணிக்கும் ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளன.

பலவீனம்: ஆட்டத்தை அணுகும் முறையை நன்கு அறிந்திருந்தாலும் கோல்கள் அடிக்கும் விஷயத்தில் தேக்கம் அடைவது பலவீனமாக உள்ளது. தகுதி சுற்றில் ஜப்பான் அணி 12 ஆட்டங்களில் 10 கோல்கள் மட்டுமே அடித்திருந்தது.

கோஸ்டாரிகா

தரவரிசை 31; பயிற்சியாளர் – லூயிஸ் பெர்னாண்டோ ஸ்வாராஸ்:

கோஸ்டாரிகா கடந்த ஐந்து உலகக் கோப்பைகளில் நான்கில் பங்கேற்றது. 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தொடரில் விளையாடிய கோல்கீப்பர் கீலர் நவாஸ் மற்றும் விங்கர் பிரையன் ரூயிஸ் கத்தாரிலும் களமிறங்குகின்றனர். 2014ஆம் ஆண்டு தொடரில் முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து மற்றும் இத்தாலி அடங்கிய குழுவில் இருந்த கோஸ்டாரிகா லீக் சுற்றில் முதலிடம் பிடித்திருந்தது. இம்முறையும் இரண்டு முன்னாள் சம்பியன்களை எதிர்த்து போட்டியிட உள்ளனர்.

பலம்: அணியின் டிபன்ஸ் மிகவும் வலுவாக உள்ளது. இதனால் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்வதில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். நொக் அவுட் சுற்றுகளில் போட்டியை கூடுதல் நேரம் மற்றும் பெனால்டி ஷூட் அவுட்டுக்கு கொண்டு செல்லும் திறன் கோஸ்டா ரிகாவிடம் உள்ளது.

பலவீனம்: சமீப காலமாக கோஸ்டாரிகா கோல் அடிக்க திணறி வருகிறது. தகுதி சுற்றில் அதிகபட்சமாக ஜோயல் கேம்ப்பெல் 3 கோல்கள் அடித்திருந்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment