ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிதான் முதல் குற்றவாளி. அவர் தற்போது பொய்யான தகவல்களை அளித்து வருகிறார் என குண்டு வெடிப்பின்போது உயிர் தப்பிய போலீஸ் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதுகாப்பு பணியில் இருந்தவரான ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி நேற்று காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ராஜீவ் காந்தி படுகொலையின்போது நான் எஸ்ஐயாக பாதுகாப்பு பணியில் இருந்தேன். அந்த குண்டு வெடிப்பில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். என் கையில் 2 விரல்கள் துண்டிக்கப்பட்டன. உடல் முழுவதும் குண்டு துகள்கள் இப்போதும் உள்ளன. என் உடலின் இடது பாகம் தீ காயம் அடைந்துள்ளது. நான் ராஜீவ் காந்தி படுகொலையை கண்ணால் கண்ட சாட்சி. இந்த வழக்கில் நளினி முதல் குற்றவாளி. 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரும் சட்டங்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தால் தற்போது விடுதலையாகி உள்ளனர்.
விடுதலை பெற்று வந்த நளினி ஊடகங்களுக்கு நிறைய பொய்யான தகவல்களை அளிக்கிறார். அதாவது, நளினியை நான் சம்பவ இடத்தில் பார்க்கவில்லை என்று கூறுகிறார். மேலும், அடையாள அணிவகுப்பின்போது போலீஸ் உதவியுடன்தான் நான் அவரை அடையாளம் காட்டியதாக கூறுகிறார். என்னுடைய சாட்சியை மட்டும் வைத்துக் கொண்டு மட்டும் நளினி கைது செய்யப்படவில்லை. நீதிமன்றம் தண்டனை கொடுக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகளை அடிப்படையாக வைத்துதான் அனைவருக்கும் தண்டனை கொடுத்தார்கள்.
குண்டுவெடிப்பின்போது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தான் இல்லை என்றும், இந்திராகாந்தி சிலை அருகில் இருந்ததாகவும் நளினி பொய் கூறுகிறார். ஆனால் அன்றைய நாளில் வெளிவந்த பத்திரிக்கைகளில் நளினி, சுபாவுடன் கூட்டத்தில் இருப்பது படத்துடன் பிரசுரமாகி உள்ளது. விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்துக்குள் வழிகாட்டி, அடைக்கலம் கொடுத்த நளினிதான் முதல் குற்றவாளி. நளினி உதவியின்றி ராஜீவ் காந்தியை கொன்று இருக்க முடியாது. போலீஸார், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என 15 பேர் இறந்தனர். எம்.ஏ. ஆங்கில பட்டதாரியான நளினி, ராஜீவ் காந்தி என்றால் யார் என்றே தெரியாது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.
தமிழக மக்களை நம்பி வந்த ராஜீவ் காந்தியை கொன்றது தமிழக மக்களுக்கு இழுக்கு இல்லையா, நளினி நம் நாட்டுக்கே ஒரு துரோகி, முன்னாள் பிரதமரை கொன்ற கொலைகாரி, சோனியா காந்தி நளினியை மன்னித்துவிட்டேன் என்று கூறிய வார்த்தை நீதிபதிகளின் காதுகளில் கேட்டதால்தான் இவர்கள் விடுதலை ஆனார்கள். எனவே, சோனியா காந்தி, இறந்த போலீஸாரின் குடும்பத்தினர், உயிர் இழந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தினரிடம் நளினி மன்னிப்பு கேட்க வேண்டும். ஒன்றும் அறியாத மக்களின் உயிரை எடுக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ பலராமன், மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.