பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான் மீதான தாக்குதல் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பஞ்சாப் மாகாண பொலிஸ் அதிகாரிக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “
குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வாறு செய்யாவிட்டால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் என்று தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் குறிப்பிட்டார்.
இம்ரான் கான் நடத்திய பேரணி, உச்ச நீதிமன்றத்தின் மே 25 கட்டளைகளை மீறியதாக இம்ரானுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அவமதிப்பு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது இந்த விடயம் எழுப்பப்பட்டது.
பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையில் நீதிபதிகள் இஜாசுல் அஹ்சன், நீதிபதி முனீப் அக்தர், யஹ்யா அப்ரிடி மற்றும் நீதிபதி மஜஹர் அக்பர் நக்வி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
இந்த விசாரணையின் போது, வீடியோ இணைப்பு மூலம் பங்கேற்ற பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் எஃப்ஐஆர் ஏன் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கேட்டார்.
“எப்ஐஆர் எப்போது பதிவு செய்யப்படும் என்று சொல்லுங்கள், எப்ஐஆர் பதிவு செய்யாததற்கு உறுதியான காரணம் இருக்க வேண்டும்“ என்று கூறினார்.
தாக்குதல் நடந்து 90 மணிநேரம் ஆகியும் எஃப்.ஐ.ஆர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று பண்டியல் குறிப்பிட்டார்.
“அது இல்லாமல் எப்படி விசாரணை தொடங்கப்படும்? எஃப்ஐஆர் இல்லாமல், ஆதாரங்களை கூட மாற்ற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“எப்ஐஆர் பதிவு செய்வது தொடர்பாக நாங்கள் பஞ்சாப் முதல்வரிடம் பேசியுள்ளோம்” என்று பஞ்சாப் ஐ.ஜி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் வாரிசுகளின் புகாரின் பேரிலும் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
அத்துடன் “நான்கு ஆண்டுகளில் எட்டு ஐஜிகள் மாற்றப்பட்டதை பஞ்சாப் கண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதி, “காவல்துறைக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை எங்களிடம் கூற வேண்டாம். குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் நீதி வழங்குவது எங்கள் முதன்மையான முன்னுரிமை. சட்டப்படி வேலை செய்யுங்கள், நீதிமன்றம் உங்களுடன் உள்ளது“ என ஐஜியிடம் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
ஐ.ஜியின் பணியில் யாரும் தலையிட மாட்டார்கள் என்று உறுதியளித்து, இந்த விஷயத்தை விசாரிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
“ஐஜி சாஹிப், நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள். யாராவது தலையிட்டால், அவர்களின் பணியில் நீதிமன்றம் தலையிடும்” என்று அவர் கூறினார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாவிட்டால் தானாக முன்வந்து நோட்டீஸ் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
“ஒரு தேசியத் தலைவரைக் கொல்ல முயற்சி நடந்தது, விஷயத்தின் உணர்திறனை உணருங்கள். விசாரணை செய்து, ஆதாரங்களைச் சேகரித்து, தடயவியல் பகுப்பாய்வு நடத்துங்கள்.” என்றார்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி இதனை வரவேற்றுள்ளது. கட்சியின் பிரமுகர் ஃபவாத் சவுத்ரி இந்த முடிவைப் பாராட்டி, “நீதியை நோக்கிய முதல் படி” என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயத்துடன் தப்பித்தார். ஆனால் இந்த சம்பவம் பற்றி பொலிசார் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை.
ஏனெனில், கொலை முயற்சி சூத்திரதாரிகள் என்ற இம்ரான் கானின் குற்றச்சாட்டிலிருந்து இராணுவ ஜெனரலின் பெயரை கைவிட வேண்டும் என்று அதிகாரிகள் விரும்புகிறார்கள்.
எனினும், இம்ரான் அதற்கு இணங்கவில்லை. “அடிமையாக வாழ்வதற்குப் பதிலாக மரணத்தையே விரும்புவதாக” கூறி, தன் மீதான தாக்குதலில் இருந்து தப்பிய அதே இடத்திலிருந்து இஸ்லாமாபாத்திற்கு அணிவகுப்பை மீண்டும் தொடங்க உள்ளார்.
பஞ்சாப் அமைச்சரவையும் வெள்ளிக்கிழமை இந்த விஷயத்தை விவாதித்தது. இதில் ஐஜிபி பைசல் ஷாகர் மற்ற மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் மாகாண சட்ட அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பர்வேஸ் இலாஹியும், இராணுவ ஜெனரலின் பெயரைப் புகாரில் குறிப்பிடுவது குறித்து இம்ரான் கான் கட்சியின் தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தி, அவரது பெயரை நீக்கும்படி அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
பஞ்சாப் மாகாணத்தில் கடந்த வியாழன் அன்று அரசுக்கு எதிராக நீண்ட பேரணி நடத்தும் போது நடத்தப்பட்ட தாக்குதலில் இம்ரான் கான் மற்றும் 14 பேர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய நவீத் முகமது பஷீர் கைது செய்யப்பட்டார். இருவர் அவருக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
ஒரு தொலைக்காட்சி உரையில், கான் தனக்கு முன்பே ஏதோ நடக்கப் போகிறது என்று தெரியும் என்றார்.
“வஜிராபாத் மற்றும் குஜராத் இடையே எங்காவது என்னைக் கொல்ல ஒரு திட்டம் இருப்பதாக நான் ஏற்கனவே அறிந்தேன்,” என்று கான் கூறினார்.
“நான்கு பேர் என்னைக் கொல்ல சதி செய்தனர், நான் அந்த நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு வீடியோவை உருவாக்கி வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டேன்” என்று அவர் கூறினார்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனுவல்லா மற்றும் சக்திவாய்ந்த இன்டர்-சர்வீஸ் உளவுத்துறையின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பைசல் நசீர் ஆகியோரே தன் மீதான கொலைமுயற்சி சூத்திரதாரிகள் என இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.