Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மேலும் கட்சிகளை இணைக்க பேச்சு ஆரம்பம்: சம்பந்தனின் தலைமை கைமாறுகிறது?; சவாலாகும் சுமந்திரனின் எதிர்காலம்!

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் பிரதான கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியிலுள்ள 6 கட்சிகளும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவது தொடர்பில் ஏற்கெனவே பல தடவைகள் கூடிக்கதைத்து, சில நகர்வுகளை இணைந்து மேற்கொண்டிருந்தன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள், ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட சில விவகாரங்களில் தமக்குள் கூடிப் பேசியிருந்தன. எனினும், ஒரே கூட்டணியாக- இணைவது தொடர்பில் இதுவரை பேசியிருக்கவில்லை.

தற்போது, அதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதலாவது பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளின் தலைவர்களும் அன்று சந்தித்து பேசியிருந்தனர்.

இருபாலையிலுள்ள, ஈ,பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் க.சர்வேஸ்வரனின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு இந்த சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியை தவிர்த்து, இந்த முயற்சியை முன்னெடுக்கவில்லையென சந்திப்பின் ஏற்பாட்டுத் தரப்பினர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் அண்மையில் ஏற்பட்டுள்ள மோதல்கள், 6 கட்சி கூட்டங்கள் தொடர்பில் தமிழ் அரசு கட்சிக்குள் உள்ள “தத்தளிப்பான நிலைமை“ உள்ளிட்ட காரணங்களினால் அன்றைய சந்திப்பிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனினும், மறுநாள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சந்திப்பு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து, விரைவில் இரா.சம்பந்தனையும் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற  கட்சிகளை மீண்டும் ஒன்றிணைப்பதே ஏற்பாட்டாளர்களின் தற்போதைய நோக்கம்.

இதேவேளை, 6 தமிழ் கட்சிகளும் விரைவில் இந்திய விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் ஆளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர் ஒருவரை, தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசவுள்ளனர். 6 கட்சிகளில் ஒன்றின் பிரமுகர் அண்மையில் இந்தியா சென்று வந்துள்ளார். இந்திய சந்திப்புக்களை அவர் ஒழுங்கு செய்துவிட்டு வந்துள்ளார். இந்த விபரங்களும், அண்மைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ள நிலைமை, அரசியல் ஞானமற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய உறுப்பினர்கள் சிலர், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென அண்மைக்காலமாக வலியுறுத்தி வரும் பின்னணிகளில் இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

தலைமைத்துவ சிக்கல்

இந்த புதிய முயற்சியில் பல சவால்கள் உள்ளன. இரா.சம்பந்தனின் தலைமையை குற்றம்சாட்டிக் கொண்டு வெளியேறியவர்கள், மீண்டும் அவரது தலைமைத்துவத்தின் கீழ் இணைவதில் தயக்கம் காட்டுவார்கள். அதேநேரம், தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கும் எந்த அறிகுறியையும் இரா.சம்பந்தன் வெளிப்படுத்தவில்லை.

புதிய ஒற்றுமை முயற்சியின் கீழ், கூட்டுத்தலைமைத்துவமே முன்மொழியப்படலாமென தமிழ்பக்கம் கருதுகிறது.

புதிய ஒற்றுமை முயற்சியை சம்பந்தன் வரவேற்றாலும், அது தனது தலைமைத்துவத்தின் கீழ் இயங்குவதையே அவர் விரும்புவார். ஆனால், புதிய தரப்புக்கள் அதை விரும்பாது.

ஏனெனில், இரா.சம்பந்தன் உடனடியாக பாராளுமன்றக்குழு தலைமையை துறக்க வேண்டுமென கூட்டமைப்பிற்குள் குரல்கள் எழத் தொடங்கி விட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற குழு தலைவரை மாற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

இது பற்றி ஆராய அடுத்த வாரமளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இரா.சம்பந்தன் தற்போது பாராளுமன்றம் வருவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு அல்லது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் நடப்பதில்லை. சம்பந்தனின் முதுமையின் வெளிப்பாட்டின் எதிரொலியாக, தமிழ் தேசிய கூட்மைப்பிற்குள் முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றன.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, புதிய பாராளுமன்றகுழு தலைவரை தெரிவு செய்ய வேண்டுமென்றும், அதற்காக ஒருங்கிணைப்புக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தி, பல எம்.பிக்களின் சார்பில் இரா.சம்பந்தனிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தனது தலைமைத்துவத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் கூட்டமொன்றை கூட்ட இரா.சம்பந்தன் விரும்பாவிட்டாலும், நிலைமை இரா.சம்பந்தனின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதுதான் உண்மை. அதனால், விரைவில் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தவைர் தெரிவாகுவார் என தெரிகிறது.

நெருக்கடியில் சுமந்திரன்

இந்த புதிய நகர்வுகளால் எம்.ஏ.சுமந்திரனிற்கு அசௌகரியங்கள் ஏற்படலாமென ஊகிக்கப்படுகிறது. கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தரப்புக்கள் அனைத்தும் எம்.ஏ.சுமந்திரன் மீதே அதிக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.

எம்.ஏ.சுமந்திரனின் வருகையின் பின்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உடைவுகள் ஆரம்பித்ததாக அண்மையில் மூத்த சட்டத்தரணி கே.வி.தவராசாவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கூட்டமைப்பில் புதிய தரப்புக்களை உள்ளீர்ப்பது, எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கத்தை முற்றாக இல்லாமல் செய்துவிடும். அண்மைக்காலமாக, கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரன்ன நகர்சுகள் சறுக்கலில் முடிகின்றன. சுமந்திரனிற்கு எதிராக கூட்டமைப்பின் எம்.பிக்கள் கட்சி பேதமின்றி இணைந்து வருகின்றனர்.

பல மாதங்களின் முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளரை தெரிவு செய்வதற்காக கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் இருவருக்கும் தலா 5 வாக்குகள் கிடைத்தன. தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால், சுமந்திரன் 3, செல்வம் அடைக்கலநாதன் 7 வாக்குகளை பெறுவார்கள்.

இந்த சூழலில், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைமை தெரிவில், எம்.ஏ.சுமந்திரன் போட்டியிலேயே இருக்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. அரசியல் மரபின்படியும், நியாயத்தின் படியும், செல்வம் அடைக்கலநாதன் அல்லது த.சித்தார்த்தனே அந்த பொறுப்பிற்கு வர வேண்டும்.  கூட்டமைப்பின் பெரும்பான்மையானவர்களின் அபிப்பிராயமும் இதுதான்.

இரண்டு கனவுகள்

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இரண்டு தரப்பினர் இரண்டு தலைமைத்துவங்களை குறிவைத்துள்ளனர்.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை குறிவைத்துள்ளனர். தமிழ் அரசு கட்சியின் தலைமைக்குள் மட்டுப்பட அவர்கள் விரும்பவில்லை. எதிர்காலத்தில் அந்த முயற்சிக்கு இடையூறாக அமையலாமென்பதாலேயே முன்னரே திட்டமிட்டு, மாவை சேனாதிராசா தேசியப்பட்டியல் நியமனத்திலிருந்து வெட்டப்பட்டார்.

அடுத்தவர், சி.சிறிதரன். அவர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைத்துவத்தை குறிவைத்துள்ளார். எனினும், மாவை சேனாதிராசாவை நெருக்கடிக்குள்ளாக்கி தலைமையை கைப்பற்றும் எண்ணம் அவரிடமில்லை. முறைப்படியான தலைமை மாற்றம் நிகழும் போது, அந்த பதவிக்கு அவர் போட்டியிடுவார்.

தற்போதைய புதிய நிலைமைகள் எம்.ஏ.சுமந்திரனிற்கு சாதகமானதாக இல்லை. மெதுமெதுவாக சுமந்திரன் மீது இருந்த அதிருப்திகள் இப்போது ஒன்றுதிரண்டு, சுமந்திரன் விவகாரத்தில் இப்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் பெரும்பாலானவர்கள் கிட்டத்தட்ட ஓரணிக்கு வந்து விட்டார்கள். அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடக்கும் வரை- இந்த நாடாளுமன்றக்குழுவிற்குள் சுமந்திரன் தனது அரசியல் எதிர்காலத்திற்கு சாதகமாக எதையும் சாதிக்க முடியாத நிலைமையேற்பட்டு விட்டது.

பாராளுமன்றகுழு தலைவராக தற்போது சம்பந்தன் இருந்தாலும், நீண்டகாலத்திற்கு முன்னதாகவே, தனக்கு பதிலாக சுமந்திரனை அவர் நியமித்து விட்டார். பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டங்களில் சுமந்திரனே கலந்து கொள்வார் என சம்பந்தன் அறிவித்திருந்தார். அதனால் நிழல் பாராளுமன்ற குழு தலைவராக அவரே செயற்பட்டு வந்தார்.

தற்போது அந்த நிலைமையில்லை. அவரால் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை செல்வாக்கு செலுத்த முடியவில்லை. இதன் விளைவுதான், 22வது திருத்தத்தில் அவர் வாக்களிக்காமல் விட்டது.

அதனால், வாக்களிப்பின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவி அனேகமாக எம்.ஏ.சுமந்திரனிற்கு சிக்கலானதாக மாறும். அதை சம்பந்தன் விரும்புவாரோ தெரியாது. ஆனால், கூட்டமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில், எம்.ஏ.சுமந்திரனை ஆதரிக்கும் முடிவை இரா.சம்பந்தன் எடுப்பாராயின், அவரையும் மீறி கூட்டமைப்பு எம்.பிக்கள் செயற்படுவார்கள் என்பதே தகவல். அந்த நிலைமைக்கு இரா.சம்பந்தன் செல்ல விரும்பமாட்டார்.

தற்போதைய நிலைமையில், எம்.ஏ.சுமந்திரனுக்கு அரசியலில் அட்டமத்து சனி.

இந்த நிலைமைகள் சி.சிறிதரனிற்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தாது. மாறாக, சாதகமான நிலைமையையே தோற்றுவிக்கும். தமிழ் அரசு கட்சியில் எம்.ஏ.சுமந்திரன் செல்வாக்கு செலுத்தும் வரை, அது கனடாவிலுள்ள “வயோதிபர்களின்“ தாளத்திற்கே ஆடும். அந்த வயோதிபர்கள் பலர் அறளை பெயர்ந்த முடிவுகளை எடுப்பவர்கள். அந்த தரப்புக்களின் செல்வாக்கு இருக்கும் வரை கட்சி தலைமைக்கான கேள்வி ஏற்பட்டால் சாணக்கியன், அஸ்மின் மாதிரியான வில்லங்கமான முடிவுகளையே எடுப்பார்கள்.

அதனால் எம்.ஏ.சுமந்திரன் பலமிழப்பது, தமிழ் அரசு கட்சிக்குள் சிறிதரனை பலப்படுத்தும்.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுனெ ஒரு தரப்பு வலியுறுத்துகிறது. ஒருவேளை, அப்படியொரு சூழல் ஏற்பட்டால்,  ஏனைய தரப்புக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படவும் வாய்ப்புள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment