பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட பின்னர் அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுட்டுக்கொல்லவே முயன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி, இம்ரான் கானின் PTI கட்சி நடத்தும் தொடர் பேரணி, வியாழன் அன்று குஜ்ரன்வாலா மாவட்டத்தின் வஜிராபாத் நகருக்குள் நுழைந்த போது, துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இம்ரான் கான் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். இம்ரான் கானின் காலில் துப்பாக்கிச்சூட்டு காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், “மக்களை தவறாக வழிநடத்தியதால்” முன்னாள் பிரதமரைக் கொல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார்.
“என்னால் அதைத் தாங்க முடியவில்லை … இம்ரான் கானைக் கொல்ல முயன்றேன். நான் முயற்சித்தேன்… கானைக் கொல்ல என்னால் இயன்றவரை முயற்சித்தேன், கானை மட்டும் கொல்ல முயற்சித்தேன், வேறு யாரையும் கொல்லவில்லை,” என்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறினார்.
“அவர்களின் ஒலி அமைப்பில் உரத்த இசையை இசைப்பதன் மூலம் அவர்கள் [அசானின்] புனிதத்தை மீறுகிறார்கள் என்று நான் நினைத்தேன். என் மனசாட்சியால் அதைக் கையாள முடியவில்லை, நான் நடவடிக்கை எடுத்தேன்“ என்றார்.
இது தன்னிச்சையான செயலா அல்லது திட்டமிடப்பட்ட செயலா என்று கேட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முதலில் இது “தன்னிச்சையான முடிவு” என்று கூறினார். பின்னர் “இன்று காலை அதை செய்ய முடிவு செய்தேன்” என்று கூறினார்.
இருப்பினும், மூன்றாவது முறை குறிப்பிடும் போது, லாகூரிலிருந்து புறப்பட்டதிலிருந்து கானைச் சுடத் திட்டமிட்டதாகக் கூறினார். “நான் அவரை விடமாட்டேன் என்று திட்டமிட்டேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
அவரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டபோது, யாரும் இல்லையென மறுத்தார்.
துப்பாக்கிதாரி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மேலதிக தடயங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபரின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ கசிந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் முழு ஊழியர்களையும் பணி இடைநீக்கம் செய்து, பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பெர்வைஸ் எலாஹி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வீடியோ கசிவு குறித்து விசாரணை நடத்தவும், பொறுப்பற்ற அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாகாண முதல்வர் பஞ்சாப் ஐஜிக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் முழு ஊழியர்களின் கையடக்கத் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அந்த தொலைபேசிகளின் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என்று முதல்வர் எலாஹி கூறினார்.