எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பல உறுப்பினர்கள், பொலிஸாரால் அமைக்கப்பட்ட மனித அரண்களை தாண்டிச் செல்லவில்லையென குறிப்பிட்டு, போராட்டத்தில் எதிர்ப்பை சந்தித்தனர்.
இதையடுத்து அவர்கள் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து இன்று வெளியேறியதைக் காணமுடிந்தது.
அரசுக்கு எதிராக வெகுஜன போராட்டம் இன்று மருதானை ரெக்னிக்கல் சந்தியில் இருந்து ஆரம்பித்தது. எனினும், கோட்டை ரயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் நெருக்காத வகையில் பெரும் பொலிஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரணை உடைக்க போராட்டக்காரர்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை.
போராட்டக்களத்திலிருந்த சஜித் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை முன்வரிசைக்கு சென்று, அரணை உடைத்துச் செல்லுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அங்கு வன்முறையை தவிர்ப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமது வாகனங்களில் ஏறி போராட்ட இடத்தை விட்டு வெளியேறினர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர், பொலிஸ் மனித தடுப்பை தாண்டி செல்ல முடியாவிட்டால், சஜித் ஏன் சம்பவ இடத்திற்கு வந்தார் என்று கேள்வியெழுப்பினர்.
சஜித்தும், ஏனையவர்களும் வெளியேறிய போது சிலர் கூச்சலிட்டனர்.
பின்னர் போராட்டம் அமைதியான முறையில் முடிவுக்கு வந்தது.