26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இந்தியா

விலக மறுத்த காதலனை பூச்சி மருந்து கொடுத்து கொன்ற காதலி பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!

காதலனை விசம் கொடுத்து கொன்றதற்காக கைதான இளம் பெண், பொலிஸ் நிலைய மலசலகூடத்தில் இருந்த லைசோலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் அவர் நெடுமங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது கைது இன்று பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

முன்னதாக நேற்று நடந்த விசாரணையில், களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன்ராஜுக்கு கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார். தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி – கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஷாரோன் ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

கிரீஷ்மா கடந்த 14ஆம் திகதி ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். ஷாரோன் ராஜிக்கு தனது நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருந்திருக்கிறார். ஷாரோன்ராஜ் தனியாக கிரீஷ்மாவின் வீட்டுக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். பைக்கில் இருந்த அவரது நண்பர் ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக்கேட்டதற்கு, அவர் சரியாக பதில் சொல்லவில்லை எனகூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டுக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை மோசமானது. அதைத் தொடர்ந்து பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகள் செயல் இழந்தன. அதைத் தொடர்ந்து அவர் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார்.

கிரீஷ்மா வீட்டில் ஜூஸ் குடித்ததாக ஷாரோன் ராஜ் மருத்துவமனையில் வைத்து கூறியதைத் தொடர்ந்து அவரின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஷாரோன் ராஜின் உடலில் விசம் கலந்ததால் மரணம் நிகழ்ந்ததாக, மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.

கிரீஷ்மா-வுக்கு ஏற்கனவே வேறு நபருடன் நிச்சயம் ஆனதால், அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ஷாரோன் ராஜுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக ஷாரோன் ராஜின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

ஜோதிட கணிப்பின் பேரில் கிரீஷ்மா கொலைக்கு சதி செய்ததாக ஷரோனின் தாய் பிரியா தெரிவித்துள்ளார். கிரீஷ்மா தனது ஜாதகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஷரோனை திருமணம் செய்து கொள்ளச் சொன்னதாக அவர் குற்றம் சாட்டினார்.

“அவள் ஷரோனிடம் அன்பாக நடந்துகொண்டு அவனுடைய உயிரைப் பறித்தாள். கிரீஷ்மாவை ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்ததாக ஷரோன் என்னிடம் சொன்னான். அவள் வெர்மில்லியன் அணிந்திருந்த அவளுடைய புகைப்படத்தையும் காட்டினான். அவனுடைய போனில் இருந்த சில புகைப்படங்களில் கிரீஷ்மா தாலி அணிந்திருந்தாள். ” ன்று ஷரோனின் தாய் கூறினார்.

மருத்துவமனையில் ஷரோன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, ​​கிரீஷ்மா அப்பாவித்தனமாக நடித்தார். ஷரோனுக்கு வழங்கிய ஆயுர்வேத மருந்து விவரங்களையும் மறைத்தார்.

தொழிலில் ஆயுர்வேத மருத்துவராக இருக்கும் ஷரோனின் சகோதரர் ஷிமோன், மருந்தின் விவரங்களைச் சேகரிப்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டார். ஆனால், அந்த மருந்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை என்று கிரீஷ்மா தெரிவித்து விட்டார்.

கிரீஷ்மாவிற்கு கடந்த பெப்ரவரியில் இராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இது குறித்து ஷரோன் ராஜ் பிரச்சனையேற்படுத்திய போது, ஜோதிட கணிப்பின்படி, தனது முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும், நவம்பர் மாதத்திற்குப் பிறகு தான் கணவருடன் வாழ முடியும் என்றும் கிரீஷ்மா ஷரோனை நம்பவைத்தார்.

“ஜோதிட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அவள் திருமணத்திற்கு முன்பே என் மகனைக் கொன்றாள்” என்று ஷரோனின் தாய் குற்றம் சாட்டினார்.

அதே சமயம் தான் குடித்த மருந்து கஷாயத்தை ஷாரோன்ராஜ் கேட்டதால் குடிக்க கொடுத்ததாகவும், அது கசப்பாக இருப்பதாக ஷாரோன்ராஜ் கூறியதால் ஜூஸ் கொடுத்ததாகவும், மற்றபடி தங்கள் வீட்டில் விஷம் இல்லை என்றும் கிரீஷ்மா தெரிவித்துவந்தார்.

இந்த நிலையில் வழக்கு மாவட்ட கிரைம் பிராஞ்ச்க்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோரிடம் கிரைம் பிராஞ்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். 8 மணித்தியால விசாரணையை தொடர்ந்து, தனது மாமா பயன்படுத்தி வந்த கபிக் என்ற களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன்ராஜிக்கு கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து பூச்சிமருந்து போத்தலும் மீட்கப்பட்டது.

தனது அந்தரங்க போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததாகவும், தன்னை விட்டு விலக அவர் தயாராக இருக்காததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த போட்டோக்களை தனது வருங்கால கணவருக்கு ஷாரோன் ராஜ் அனுப்பலாம் என கிரீஷ்மா பயந்துள்ளார். அந்த போட்டோக்களை அழிக்கும்படி கேட்ட போது, ஷாரோன் ராஜ் அதற்கு மறுத்து விட்டார்.

போட்டாக்களை அழிக்கும்படி கிரீஷ்மா தற்கொலை மிரட்டல் விடுத்தும் ஷாரோன் ராஜ் அழிக்காததால், அவரை கொல்ல முடிவெடுத்ததாக விசாரணையில் தெரிவித்தார்.

ஷாரோனும் கிரீஷ்மாவும் வழக்கமாக பேருந்தில் பயணம் செய்யும் போது ஒருவரையொருவர் காதலித்தனர். அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக உறவில் இருந்தனர். கிரீஷ்மா அழகியமண்டபம் முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஷாரோன் நெய்யூர் கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் பைக்கில் தொலைதூர ஊர்களுக்கு ஒன்றாக செல்வது வழக்கம் என நண்பர்கள் தெரிவித்தனர்.

பிஏ தேர்வில் 8வது ரேங்க் பெற்ற கிரீஷ்மா, எம்ஏ சேர்ந்த பிறகு படிப்பில் சிறந்து விளங்கவில்லை. இதைக் கவனித்த அவரது குடும்பத்தினர், அவளது செயல்பாடுகளைக் கவனித்து, ஷாரோனுடனான உறவைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த உறவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கிரீஷ்மா தனது குடும்பத்தை நம்ப வைத்துள்ளார்.

ஷாரோனின் தொலைபேசியில் கிரீஷ்மாவுடனான அவரது பயணங்களின் காட்சிகளும் இருந்தன. இந்த ஆதாரங்கள் அனைத்தும் வழக்கில் முக்கியமானதாக மாறியது.

ஷாரோனின் மரணத்தில் கிரீஷ்மாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிரீஷ்மாவின் தந்தை ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்.

தனது முதல் கணவர் உயிரிழந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டுள்ளதாக ஒரு கதையை புனைந்த போதும், ஷாரோன் ராஜ் விலகாததால் கொலைக்கு திட்டமிட்டதாகவும், கொலைக்கு முன்னர் கூகிளில் தேடியதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த ஷாரோன் ராஜ் முகம் கழுவ சென்ற சமயத்தில் ஆயுர்வேத மருந்தில் நஞ்சை கலந்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவும், ஷாரோன்ராஜிம் ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment