இலங்கையில் டிஸ்னிலாண்ட் பூங்காவை உருவாக்கப் போவதாக இராஜாங்க அமைச்சர் டயான கமகே தெரிவித்த கருத்து தொடர்பில், கொழும்பு ஆங்கில ஊடகமொன்று பல சுவாரஸ்ய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்தவாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றில், உலகின் சிறந்த பொழுதுபோக்கு பூங்காவான டிஸ்னியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், தெற்காசியாவின் முதல் டிஸ்னி லாண்ட் மற்றும் பூங்கா அம்பாந்தோட்டையில் அமைக்கப்படுமென அமைச்சர் டயானா கமகே குறிப்பிட்டதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று வேர்ல்ட் டிஸ்னி நிறுவனத்தை தொடர்பு கொண்டு வினவிய போது, இலங்கையில் பூங்காவை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
டயான கமகேவின் தகவல்களை முதன்முதலில் ஒரு தொழில்நுட்ப பத்திரிகையாளர் கேள்விக்குள்ளாக்கினார்.
அம்பாந்தோட்டையில் 16-18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப் போவதாக வேர்ல்ட் டிஸ்னியின் முதலீட்டாளர் உறவுகளை வழிநடத்தும் அலெக்ஸியா குவாட்ரானியை மேற்கோள் காட்டி டயானா கமகேவின் அலுவலகத்தில் இருந்து போலியான “அறிக்கை” வெளியிடப்பட்டதாக அவர் ருவிட்டரில் தெரிவித்தார்.
இதையடுத்து, கொழும்பு ஆங்கில ஊடகமொன்று டயானா கமகேவை தொடர்பு கொண்டு, வேர்ல்ட் டிஸ்னி அமைப்பது தொடர்பில் நிறுவனங்களில் யாருடன் தொடர்பில் இருந்தீர்கள் என்று வினவியபோது, அமைச்சர் கமகே பதிலளிக்க தயங்கினார் என செய்தி வெளியிட்டிருந்தது.
பின்னர், வேர்ல்ட் டிஸ்னி தகவலை யாரோ போலியாக பரப்பி விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவரே செய்தியாளர் சந்திப்பில் அதை குறிப்பிட்டதாக ஊடக நிறுவனம் சுட்டிக்காட்டிய போது,
டயானா கமகே பின்னர் நினைவு கூர்ந்தார்: “ஓ, ஆம், நான் அதைக் குறிப்பிட்டேன்… நான் டிஸ்னியை இலங்கைக்கு கொண்டு வருவேன். ஆனால் யார், எப்படி, எப்போது, என்ன, எங்கே என்று நான் சொல்லவில்லை. நான் திட்டமிட்டுள்ளேன், அவர்களை இலங்கைக்கு கொண்டு வர டிஸ்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று கூறினேன்“ என்றார்.
“நீங்கள் பேச்சுக்களை ஆரம்பித்தீர்களா?” என ஊடக நிறுவனம் வினவியது.
டயானா கமகே: “ஆம்.”
ஊடகம்: “யாருடன்?”
டயானா கமகே: “யார் விஷயத்தைக் கையாளுகிறார்களோ… அவர்களுடன். அது சரியாகும்போது, நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீர்கள். மிக்க நன்றி. பை பை.” என தொலைபேசியை துண்டித்துள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.