கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 25 வயது இளைஞரிடம், இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத வலையமைப்புடனான தொடர்புக்காக 2019 இல் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேட்டில் பழமைவாய்ந்த சங்கமேஸ்வரர் (கோட்டை ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன.
இந்நிலையில், கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் நோக்கி ஒரு மாருதி கார் நேற்று அதிகாலை 4.10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள வேகத்தடை மீது கார் ஏறி இறங்கிய போது, திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் கார் தீப்பிடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து பார்த்தபோது, கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக, உக்கடம் போலீஸாருக்கும், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து, போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் இரு துண்டாக உடைந்து, உருக்குலைந்தது. காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், வடக்கு துணை ஆணையர் மதிவாணன் ஆகியோரும் வந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
தடயவியல் துறையினர் அங்கு தடயங்களை சேகரித்தனர். காரில் வெடிபொருட்கள், வெடி மருந்துகள் ஏதாவது இருந்ததா என்று ஆய்வு செய்தனர். சிதறிக் கிடந்த கார் உதிரிபாகங்கள், சிலிண்டர்கள், பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் 2 மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தினர்.
சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்ததால் தீப்பிடித்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
கோவையில் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திர பாபு கூறியது. காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் உயிரிழப்பு, வெடிபொருள் தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என தெரியவந்தது. அவரது வீட்டை சோதனை செய்தபோது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மருந்துகள், ரசாயனப் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை.
சிலிண்டர் எங்கிருந்து வந்துள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளோம். அவர் எங்கு சென்றார் என்பது புலன் விசாரணையின் இறுதியில்தான் தெரியவரும். அவர் என்ன திட்டமிட்டிருந்தார் என்பதும் நமக்கு தெரியவில்லை. தற்கொலை தாக்குதலுக்கு வாய்ப்பு குறைவு. என்ஐஏ விசாரணை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு டிஜிபி கூறினார்.
உயிரிழந்த ஜமேஷா முபின், பழைய துணி வியாபாரம் செய்து வந்தவர். கடந்த 2019-ல் ஒரு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது என்றார்.
சைலேந்திர பாபு, பயங்கரவாதச் சதி என்பதை நிராகரிக்கவில்லை. முபினின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் “எதிர்காலத் திட்டத்திற்காக இருந்திருக்கலாம்” என்பதால் அவர்கள் எல்லா சாத்தியங்களையும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
முபினின் வீட்டில் சோதனை நடத்தியபோது, பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சல்பர் மற்றும் கரி போன்ற வெடிக்கும் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
முபின் 2019 இல் NIA ஆல் விசாரணைக்குட்படுத்தப்பட்ட விபரமும் வெளியாகியுள்ளது.
“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் (TNTJ) கோயம்புத்தூர் மசூதியில் பிரச்சார வகுப்புகளில் கலந்துகொண்டதால் 2019 இல் நாங்கள் பரிசோதிக்க வேண்டிய ஐந்து பேரில் அவரும் ஒருவர். இந்த வகுப்புகள் இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் மூளையாக இருந்த சஹ்ரான் ஹாஷிமுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த முகமது அசாருதீனுடன் நெருங்கிய தொடர்புடையவை” என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அசாருதீன் இலங்கையின் தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து பல இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதில் பங்களித்ததாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இஸ்லாமிய அரசு குழுவின் தமிழ்நாடு பிரிவில் அவர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
முபினின் வீட்டிற்கு அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளில் சனிக்கிழமை இரவு காட்சிகள் இருந்தன. வீடியோவில் நான்கு ஆண்கள், அவர்களில் முபினும் இருப்பதாகக் கூறப்படுகிறது, இரவு 11.25 மணியளவில் வீட்டில் இருந்து ஒரு பெரிய பொருளை வெளியே இழுத்துச் செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது.
காட்சிகளில் காணப்பட்ட மற்ற மூன்று பேரை போலீசார் இப்போது தேடும் வேளையில், அவர்கள் நால்வரும் ஒரு வெள்ளை பையில் சுற்றப்பட்ட பருமனான பொருள் வெடித்த எரிவாயு சிலிண்டர் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.