இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மிகப்பெரிய ராக்கெட்டான ‘எல்விஎம் 3’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’நிறுவனம் இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது அரசு, கல்வி,வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிடம் ஒப்படைத்தது.
இந்த 36 செயற்கைக்கோள்களும் நள்ளிரவு 12.07 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ‘எல்விஎம் 3′ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ‘ஜிஎஸ்எல்வி எம்கே 3’ என்று அழைக்கப்பட்டு வந்த ராக்கெட்தான் தற்போது ‘எல்விஎம் 3’ என்று அழைக்கப்படுகிறது. இது 43.5 மீட்டர் நீளமும் 640 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் இதுவரையில் அரசு செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதன்முறையாக வணிகச் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
முன்னதாக, 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்வெளி நிலைநிறுத்தப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணி. பிரதமர் மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது. எல்விஎம்3 வணிகச் சந்தைக்குள் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். நமது ராக்கெட்களை பயன்படுத்தி வணிகக் களத்தை ஆராய்வதற்கு விரிவாக்குவதற்கு அவர் அளித்த ஆதரவு முக்கியமானது.
நாங்கள் ஏற்கனவே (தீபாவளி) கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டோம் … 36 செயற்கைக்கோள்களில் 16 வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுவிட்டன, மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் பிரிக்கப்படும். தரவு சிறிது நேரம் கழித்து வரும். சந்திரயான்-3 கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை கிட்டத்தட்ட முடிந்தது. இன்னும் சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சந்திரயான்-3 விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்” என்றார்.