காதலை துண்டித்த 23 வயது யுவதியை, கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கேரளாவின், பானூரில் இந்த கொடூர சம்பவம் இன்று (22) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது.
விஷ்ணுபிரியா (23) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விஷ்ணுபிரியாவும், ஷியாம்ஜித் என்பவரும் காதலித்து வந்த நிலையில், உறவினர்களின் எதிர்ப்பையடுத்து, விஷ்ணுபிரியா காதலை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷியாம்ஜித் இந்த கொலையை செய்துள்ளார்.
விஷ்ணுபிரியாவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் அவரது பாட்டியின் மரணச்சடங்கு நடந்து வந்தது. 4 நாட்களின் முன்னர் பாட்டி உயிரிழந்திருந்தார்.
இன்று மதியம், உடை மாற்ற வீட்டுக்கு வந்த விஷ்ணுபிரியா நீண்டநேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, விஷ்ணுபிரியா படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார்.
துண்டாடப்பட்ட தலை, அவரது கழுத்திலிருந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது.
அவரது வீட்டிற்கு அருகில் சிவப்பு டி-சர்ட், மஞ்சள் தொப்பி மற்றும் முககக்வசம் அணிந்த ஒரு நபரை பார்த்ததாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.
இதையடுத்து சிசிடிவி கேமராக்களை மையமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட விஷ்ணு பிரியாவின் செல்போன் தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இந்த விசாரணையில் தான் குற்றவாளிகள் பற்றிய தெளிவான துப்பு கிடைத்தது. பின்னர் கைபேசி கோபுரம் இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விஷ்ணு பிரியா தனியாக இருப்பதை அறிந்த குற்றவாளி, நன்கு திட்டமிட்டு வீட்டை அடைந்தார். பையில் ஆயுதமும் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது வீட்டுக்குள் புகுந்த அவர் முதலில் விஷ்ணு பிரியாவின் கழுத்தை அறுத்தார். தாக்குதலைத் தடுக்க முயன்றபோது, விஷ்ணு பிரியாவின் கைகளும் வெட்டப்பட்டன. அதன் பிறகு, மீண்டும் கழுத்தை அறுத்து, மரணத்தை உறுதி செய்தார்.
விஷ்ணுபிரியா பானூரில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிபவர்.
இதேவேளை, விஷ்ணுபிரியா தனது தோழிக்கு வீடியோ அழைப்பு விடுத்தபோது ஷியாம்ஜித் அங்கு வந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷியாம்ஜித் வருவதைத் தொலைபேசி மூலம் தோழியிடம் காட்டிய விஷ்ணுபிரியா, அவன் பெயரையும் சொன்னதாகவும், உடனே போன் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.