2022 ரி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி. அந்த அணியை வீழ்த்திய அயர்லாந்து அணி அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது .
அவுஸ்திரேலியாவில் ரி20 உலகக் கோப்பை 2022 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ‘குரூப் பி’ பிரிவில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் ஹோபார்ட் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று விளையாடின. இரண்டு அணிகளும் இந்த பிரிவில் விளையாடிய இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. அதனால் இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கும், தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் இருந்தது.
2012 மற்றும் 2016 என இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் அயர்லாந்து அணியும் தரமான கிரிக்கெட் விளையாடி வந்தது.
நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. பிரண்டன் கிங் 62 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் சொல்லும்படி ஆடவில்லை.
அயர்லாந்து சார்பில் லெக் ஸ்பின்னரான கேரத் டிலேனி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அயர்லாந்து விரட்டியது. அந்த அணி 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
போல் ஸ்டர்லிங் 48 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். கப்டன் ஆண்ட்ரூ 23 பந்துகளில் 37 ரன்களும், விக்கெட் கீப்பர் டக்கர் 35 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். டிலேனி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதே பிரிவில் ஸ்கொட்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் தற்போது விளையாடுகின்றன. அதில் வெற்றி பெறுகின்ற அணி சூப்பர் 12-க்கு முன்னேறும். ஸ்கொட்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தப் பிரிவில் முதலிடம் பிடிக்கும்.