முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடுமையான ஆட்சேபனையை தொடர்ந்து ஜனாதிபதியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6 கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு, முன்னைய கோட்டாபய ராஜபக்ச அரசு தீவிர முயற்சியெடுத்தது.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர எதிர்ப்பினால், அந்த முயற்சி தடுக்கப்பட்டு வந்தது.
புதிய ஆட்சிமாற்றத்தின் பின்னரும் இந்த விடயத்தை கூட்டமைப்பு, ரணிலிடம் சுட்டிக்காட்டியிருந்தது. புதிய காணி அபகரிப்புக்களை தடுத்து நிறுத்துவதாக ரணில் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், ஈ.பி.டி.பி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
இதுதொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுமார் 70 வீதத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழுகின்ற குறித்த கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு எந்தவிதமான அவசியமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியதுடன், இவவாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், குறித்த முயற்சிகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதுதொடர்பான அறிவுறுத்தல்களையும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு வழங்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.