நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் வாழ்க்கையில் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளனர். இருவரையும் ரஜினிகாந்த் சமரசம் செய்து வைத்தார்.
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்கள்.
இருவரும் இணைந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டார்கள்.
அதில், ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த எங்கள் பயணம், புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதையில் பிரியும் ஓர் இடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம்.
எங்களை தனி நபர்களாக சிறப்பாக பிரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனிமனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இருவரின் உறவினர்களும், திரையுலக பிரமுகர்களும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தொடர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
என்றாலும், தனுஷ் – ஐஸ்வர்யா பிரிந்தே இருந்தார்கள். விவாகரத்து கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்கள் மகன்களுடன் நேரம் செலவிட்டு வந்தனர். இருவரும் அடிக்கடி சந்தித்து மனம் விட்டு பேசி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த மாதம் மகனின் பள்ளிக்கூட விழாவில் இருவரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் முன்னிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்ததாக கூறப்படுகிறது.
இருவரும் விவாகரத்து முடிவை நிறுத்தி வைத்து இருப்பதாகவும் தெரிகிறது.